உயரம் காரணமாக அமிதாப் பச்சனுக்கு நேர்ந்த பிரச்சினைகள்
உயரமாக இருப்பதன் காரணமாக சிறுவயதில் தனக்கு நேர்ந்த பிரச்சினைகளை அமிதாப்பச்சன் பகிர்ந்துள்ளார்.;
இந்தி திரையுலகின் மூத்த நடிகர் அமிதாப்பச்சன். உயரமான நடிகரும் இவர்தான். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குழந்தைகளோடு கலந்துரையாடியபோது ஒரு சிறுமி உயரம் குறைவாக இருப்பவர்களை நான் விரும்புவது இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து உயரமாக இருப்பதன் காரணமாக சிறுவயதில் தனக்கு நேர்ந்த பிரச்சினைகளை அமிதாப்பச்சன் பகிர்ந்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''நான் உயரமாக இருந்ததால் சிறுவயதில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டேன். பள்ளி நாட்களில் நான் படித்த பள்ளியில் குத்துச்சண்டை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது. என் உயரம் அதிகமாக இருந்ததன் காரணமாக என் வயது மாணவர்களுடன் பயிற்சி எடுக்க விடாமல் என்னை சீனியர் குழுவில் சேர்த்து விட்டனர். கேவலம் எனது உயரம் காரணமாக நான் என்னை விட மிகப்பெரியவர்களோடு சேர்ந்து விளையாட வேண்டி வந்தது'' என்றார். அமிதாப்பச்சன் சொன்ன தகவலை கேட்டு அனைவரும் சிரித்தனர். மேலும் அவர் கூறும்போது ''எனது மகன் அபிஷேக் பச்சன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றுள்ளார். மகனை பார்த்தால் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அபிஷேக் பச்சன் தன்னை விமர்சிப்பவர்களுக்கு திறமையான பணி மூலமே பதில் சொல்லி வருகிறார்'' என்றார்.