'ஆபாச நடிகை என்பது இழிவு இல்லை' - ஊர்மிளா மடோன்கர் குறித்த தனது பேச்சுக்கு கங்கனா ரணாவத் விளக்கம்
ஊர்மிளா மடோன்கரை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருந்ததில்லை என கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
மும்பை,
பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாக உயர்ந்தவர் நடிகை ஊர்மிளா மடோன்கர். இந்தியில் ரங்கீலா, சத்யா, ஜுடாய் உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவர்ச்சியாகவும், குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்து புகழ்பெற்றார். தமிழில் சங்கர் இயக்கிய 'இந்தியன்' படத்தில் கமல்ஹாசனுடன் நடித்தார்.
தொடர்ந்து அரசியலில் களமிறங்கிய ஊர்மிளா, 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். இதையடுத்து 2020-ல் சிவசேனா கட்சியில் இணைந்த அவர், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்தபோது நடிகை கங்கனா ரணாவத் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.
அந்த விமர்சனத்திற்கு பதிலளித்த நடிகை கங்கனா ரணாவத், "என்னைப் பற்றி ஊர்மிளா மடோன்கர் பேசியதை பார்த்தேன். தேர்தல் வாய்ப்புக்காக நான் பா.ஜ.க.வை ஆதரிப்பதாக அவர் கூறுகிறார். தேர்தலில் போட்டியிடுவது அவ்வளவு சிரமம் இல்லை. ஊர்மிளா மடோன்கர் ஒரு வகையில் ஆபாச நடிகைதான். அவரது நடிப்பு திறமைக்காக அவர் அறியப்படவில்லை. அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்போது எனக்கு கிடைக்காதா?" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், அண்மையில் நடிகை கங்கனா ரணாவத்தை இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதி வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்தது. இதனிடையே காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கங்கனா ரணாவத் குறித்த சர்ச்சைக்குரிய பதிவு ஒன்று வெளியாகி இருந்தது. இதற்கு நடிகை கங்கனா ரணாவத் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், ஊர்மிளா மடோன்கர் குறித்து 2020-ல் கங்கனா ரணாவத் பேசிய காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து கங்கனா ரணாவத் தற்போது விளக்கமளித்துள்ளார். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது;-
"ஆபாச நடிகை அல்லது ஆபாச நட்சத்திரம் என்பது இழிவான சொற்களா? இல்லை. இது சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வார்த்தையாக உள்ளது. உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் ஆபாச நட்சத்திரங்களுக்கு கிடைக்கும் மரியாதை பற்றி சன்னி லியோனிடம் கேளுங்கள்.
நான் எதையும் நியாயப்படுத்தவில்லை. கவர்ச்சி பெண், ஷீலா கி ஜவானி போன்ற வார்த்தைகளால் அழைக்கப்படுவது நடிகைகளுக்கு ஏற்புடையதாக இருந்தால், அதை ஏன் இழிவாக பார்க்க வேண்டும்? தனிப்பட்ட முறையில் ஊர்மிளா மடோன்கரை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது கிடையாது."
இவ்வாறு கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.