பிரபல தொலைக்காட்சி நடிகர் ஓட்டலில் மர்ம மரணம்
மராட்டியத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரபல தொலைக்காட்சி நடிகர் மர்ம மரணம் அடைந்து கிடந்து உள்ளார்.;
நாசிக்,
மராட்டியத்தின் நாசிக் நகரில் இகத்பூரி பகுதியில் ஓட்டல் ஒன்றில் பிரபல தொலைக்காட்சி நடிகர் நித்தேஷ் பாண்டே தங்கியுள்ளார். இந்நிலையில், திடீரென அவர் மரணம் அடைந்து கிடந்து உள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், ஓட்டல் பணியாளர்கள் மற்றும் அவருக்கு நெருங்கியவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எனினும், முதல் கட்ட விசாரணையில், மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து இருக்க கூடும் என காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர். பிரேத பரிசோதனை முடிவுக்காகவும் காத்திருக்கிறோம் என போலீசார் கூறியுள்ளனர்.
நடிகர் நித்தேஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான, 'மஞ்சிலின் அபானி அபானி', 'அஸ்தித்வா... ஏக் பிரேம் கஹானி', 'சாயா', 'ஜஸ்தாஜூ' மற்றும் 'துர்கேஷ் நந்தினி' போன்றவற்றில் நடித்து உள்ளார்.
இதுதவிர, அவர் 'ஓம் சாந்தி ஓம்', 'கோஸ்லா கா கோஸ்லா', 'பதாய் தோ', 'ஷாதி கே சைட் எபெக்ட்ஸ்' மற்றும் 'ரங்கூன்' உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றியுள்ளார். 'ஆஸ்தா' மற்றும் 'மிசல் பாவ்' போன்ற நாடக நிகழ்ச்சிகளிலும் நித்தேஷ் பணியாற்றி உள்ளார்.
சமீபத்தில் தொலைக்காட்சி நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத் மற்றும் நடிகை வைபவி உபாத்யாய் ஆகியோர் மறைந்த நிலையில், இவரும் மறைந்தது தொலைக்காட்சி துறையினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.