ஜி.வி.பிரகாஷின் புதிய படம்
உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் புதிய படத்தில் நடிக்கிறார்.
தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் நிறைய படங்களில் கதாநாயகனாக நடித்து திறமையான நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்தி உள்ளார். அவரது நடிப்பில் வந்த படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம், விவேக் இயக்கத்தில் 13 ஆகிய 2 படங்களில் நடித்து முடித்துள்ளார். இவை அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தற்போது இன்னொரு புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை நாளை, சக்கரவியூகம் ஆகிய படங்களை இயக்கியவரும், பேமிலிமேன் 2 வெப் தொடரில் நடித்தவருமான உதய் மகேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். இதில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். புஷ்பா கந்தசாமி, கந்தசாமி பரதன் ஆகியோர் தயாரிக்கும் இந்த படத்தில் சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன், மதுசூதனன், குமரவேல், முத்துக்குமார், டேனியல், நமோநாராயணன், மயில்சாமி, முத்துக்காளை ஆகியோரும் உள்ளனர்.