ஜப்பான் நாட்டின் இந்தியத் தூதரிடம் மகனின் திருமண அழைப்பிதழை வழங்கிய நெப்போலியன்
மகனின் திருமண அழைப்பிதழை ஜப்பான் நாட்டின் இந்தியத் தூதரை சந்தித்து நெப்போலியன் வழங்கியுள்ளார்.
சென்னை,
பாரதிராஜா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் 1991ல் அறிமுகமாகியவர் நெப்போலியன். அதன் பின் தனது நடிப்பின் திறமையால் 1993-ல் ஹீரோவானார். கிட்டத்தட்ட 100 படங்களுக்கும் மேல் நடித்து வந்த நெப்போலியன் தமிழில் சுல்தான் திரைப்படத்திற்கு பிறகு நடிக்கவில்லை.
இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும், குணால், தனுஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர். இதில் தனுஷ் தனது நான்காவது வயதில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். தனுஷை குணப்படுத்த பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டநிலையில், தற்போது தனுஷ் ஓரளவு குணமாகியுள்ளார்.
இதனையடுத்து, தனுஷுக்கு திருநெல்வேலியை அடுத்த மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவேகானந்தர் என்பவரின் மகளுடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. திருமணம் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் வரும் நவம்பர் மாதம் 7-ம் தேதி நடைபெற உள்ளநிலையில், திருமண அழைப்பிதழ் வழங்கும் பணியில் நெப்போலியன் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, தனது மூத்த மகன் தனுஷின் திருமண அழைப்பிதழை சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டின் இந்தியத் தூதர் டக்காஹசி மியூன்னோவை சந்தித்து வழங்கியுள்ளார்.