ரூ.900 கோடி வசூலைக் கடந்த 'கல்கி 2898 ஏ.டி'

பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கல்கி 2898 ஏ.டி’ திரைப்படம் உலகளவில் ரூ.900 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Update: 2024-07-08 13:19 GMT

சென்னை,

பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி, பாகுபலி 2, சலார், ஆதி புருஷ் ஆகிய படங்களுக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு கிடைத்தது. வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் விதமாக இந்தியாவில் இதுவரை செலவிடப்படாத அளவிற்கு பொருட் செலவு செய்து 'கல்கி 2898 ஏ.டி' படத்தினை தயாரித்துள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், 'கல்கி 2898'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

மகாபாரதம், ஏஐ தொழில்நுட்பம், கல்கி அவதாரம் என புராணக் கதைகளுடன் எதிர்காலத்தை கற்பனை செய்து உருவான இப்படம் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுகளைப் பெற்றுள்ளது. கமல்ஹாசனின் தோற்றமும் பெரிதும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

இந்த நிலையில், உலகளவில் 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் ரூ.900 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால், இப்படம் இன்னும் சில நாள்களில் ரூ.1000 கோடியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்