நண்பனை பிரிய மனமில்லாமல் இறுதி ஊர்வல வண்டியில் கண் கலங்கியபடியே அமர்ந்திருந்த எம்.எஸ்.பாஸ்கர்...!

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என மயில்சாமி இறுதி ஊர்வலத்தில் வந்த கூட்டமே அதற்கு சாட்சியாக மாறியது.

Update: 2023-02-20 08:04 GMT

சென்னை,

பிரபல நடிகர் மயில்சாமி நேற்று மாராடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார் மயில்சாமி. நேற்று முதல்நாள் அவர் மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்றார். இந்த கோவிலுக்கு அவர் அடிக்கடி செல்வார் என்று கூறப்படுகிறது. அங்கு நேற்று இரவு முழுக்க அவர் பூஜையில் கலந்து கொண்டார். இங்கே நடந்த கச்சேரியிலும் கலந்து கொண்டார்.

இரவு முழுக்க இங்கே தூங்காமல் அவர் வழிபாடு நடத்தி இருக்கிறார். நன்றாக சாப்பிட்டுவிட்டு இவர் கோவிலுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

வழிபாடு முடித்துவிட்டு, அதிகாலையில் மயில்சாமி சாலிகிராமத்திற்கு அருகே இருக்கும் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த ரோட்டில் இருக்கும் டீ கடை ஒன்றில் இவர் நின்று டீ குடித்துள்ளார். அங்கேதான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அவருக்கு அப்போதுதான் லேசாக நெஞ்சுவலி ஏற்பட்டது போல நெஞ்சை பிடித்துக்கொண்டு அமர்ந்து உள்ளார். அங்கேயே நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்தவர் மயங்கி விழுந்தார். டீ கடையில் இருந்த சுந்தர் என்பவர் அதன்பின் அவரை ஆட்டோ ஒன்றில் ஏற்றி அனுப்பி உள்ளார். அங்கிருந்துதான் அவரை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றனர். ஆனால் அவரது உயிர் மருத்துவமனைக்கு வரும் போதே பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மயில்சாமியின் மறைவுக்கு ஏராளமானோர் திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து இன்றுகாலை மயில் சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், நடிகர் பிரபு, இயக்குனர் லிங்குசாமி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் மேள தாளங்கள் முழங்கியும் , சிவ புராணம் பாடியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. 'என் சாமி போகுதே..'

என துடி துடித்து கதறி அழுதார் மயில்சாமி மனைவி.

இதனையடுத்து சாலிகிராமத்தில் இருந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அள்ளி கொடுத்த கைகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கனக்கோனோர் கலந்து கொண்டனர்.

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என மயில்சாமி இறுதி ஊர்வலத்தில் வந்த கூட்டமே அதற்கு சாட்சியாக மாறியது. கூட்டம் அலைமோதியது.

அதன் பின்னர் ஏவிஎம் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் வழி நெடுக மக்கள் நின்று வாரி வழங்கும் வள்ளல், நகைச்சுவை மன்னனுக்கு கண்ணீர் மல்க அவரது உடலுக்கு பிரியா விடை கொடுத்தனர். "அவன் பணக்காரன் இல்ல.. ஆனா உதவுறதுல பணக்காரனா வாழ்ந்துட்டு போயிட்டான் " என சக நடிகர்கள் கூறியது மயில்சாமி எப்படி வாழ்ந்து விட்டு சென்று இருக்கிறார் என்று காட்டுகிறது.

எம்எஸ் பாஸ்கர் மயில்சாமி இருவரும் நெருங்கிய நண்பர்கள். சில படங்களில் இவர்கள் ஒன்றாக நடித்தும் உள்ளனர். சினிமா தாண்டி வெளியே இவர்கள் நெருக்கமான குடும்ப நண்பர்கள் போல வாழ்ந்து வந்தனர். இதனால் மயில்சாமி மறைவு காரணமாக எம்எஸ் பாஸ்கர் கடும் வருத்தத்தில் இருக்கிறார். இன்று காலையிலேயே மயில்சாமி வீட்டிற்கு மீண்டும் வந்த எம்எஸ் பாஸ்கர் அங்கேயே இறுதிச்சடங்கு பணிகளை கவனித்துக்கொண்டார்.

பின்னர் இறுதிச்சடங்கு வண்டியில் அமர்ந்து சோகமாக சென்றார். மயில்சாமி தலைக்கு அருகே அமர்ந்து கொண்டு சோகமாக எம்எஸ் பாஸ்கர் தலையில் கைவைத்தபடி இருந்தார். அவர் சோகத்தின் உருவாக இருந்தது பலரையும் உடைய வைத்தது. மயில்சாமிக்கு ஏற்கனவே ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இதயத்தில் ஆபரேஷன் உட்பட பல்வேறு சிகிச்சை செய்யப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்