தனது வருமானத்தில் 30 சதவீதம் நன்கொடை...2 கிராமங்களை தத்தெடுத்த நடிகர்
நாம் பேசும் நடிகர் டோலிவுட்டின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார்.;
சென்னை,
சல்மான் கான், ஷாருக்கான், சிரஞ்சீவி என பல நட்சத்திரங்கள் கிராமங்களை தத்தெடுத்திருக்கிறார்கள். தற்போது நாம் பேச போகும் நடிகரும் இரண்டு கிராமங்களைத் தத்தெடுத்திருக்கிறார். அந்த நடிகர் டோலிவுட்டின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். அவர் வேறு யாருமல்ல மகேஷ் பாபுதான்.
மகேஷ் பாபு, 1979-ம் ஆண்டு வெளியான 'நீடா' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதனைத்தொடர்ந்து அவர் குழந்தை நட்சத்திரமாக எட்டு படங்களில் நடித்தார். பின்னர், 1999-ம் ஆண்டு வெளியான 'ராஜ குமாருடு' மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இது அவருக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை வாங்கி கொடுத்தது.
அதனைத்தொடர்ந்து, முராரி மற்றும் அதிரடித் திரைப்படமான ஒக்கடு மூலம் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார். தற்போது இவர் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். மகேஷ் பாபு ஒரு படத்திற்கு ரூ 80 கோடியும், ஒவ்வொரு வருடமும் தனது வருமானத்தில் 30 சதவீதத்தை நன்கொடை வழங்குவதாகவும் கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி ஆந்திராவில் உள்ள புரிபாலம் மற்றும் தெலுங்கானாவில் உள்ள சித்தாபுரம் ஆகிய இரண்டு கிராமங்களை தத்தெடுத்துள்ளார். மகாஷ் பாபு தற்போது எஸ்.எஸ். ராஜமவுலியின் அடுத்த படமான எஸ்எஸ்எம்பி 29 படத்திற்கு தயாராகி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். படத்தைப் பற்றி இதுவரை எதுவும் தெரியவில்லை என்றாலும், இது இந்தியானா ஜோன்ஸ் மாதிரியான ஒரு சாகச படம் என்று கூறப்படுகிறது. படம் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.