மலையாள இயக்குனர் படத்தில் சூர்யா
சூர்யா பிரபல மலையாள டைரக்டர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி உள்ளது.;
தமிழ் நடிகர்களை வைத்து படம் இயக்க பிற மொழி டைரக்டர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். விஜய் நடிப்பில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் வாரிசு படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபள்ளி இயக்கி உள்ளார். இந்த படம் தெலுங்கு மொழியிலும் வெளியாகி உள்ளது. இதுபோல் தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தை தெலுங்கு டைரக்டர் வெங்கி அல்லூரி இயக்கி வருகிறார்.
கமல்ஹாசன், மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் சூர்யா பிரபல மலையாள டைரக்டர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி உள்ளது.லிஜோ ஜோஸ் மலையாளத்தில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமானவர். ஜல்லிக்கட்டு படம் தேசிய விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இவர் சொன்ன கதை சூர்யாவுக்கு பிடித்து போனதாகவும் எனவே அவரது இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். வெற்றிமாறனின் வாடிவாசல் படமும் கைவசம் உள்ளது. சுதா கொங்கரா, ஞானவேல் ஆகியோர் இயக்கும் படங்களிலும் நடிக்க இருக்கிறார்.