10 ஆண்டுகளாக லிவ்-இன் உறவில் வாழ்ந்து விட்டு மோசடி; பிரபல இளம் நடிகர் மீது பரபரப்பு புகார்
நடிகர் ராஜ் தருணுடன் கோவிலில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டேன் என அவர் புகாரில் தெரிவித்து உள்ளார்.;
புதுடெல்லி,
தெலுங்கில் பிரபல நடிகராக இருப்பவர் ராஜ் தருண். பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் மீது போலீசில் நம்பிக்கை துரோகம், மோசடி புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக லாவண்யா என்பவருடன் இவர் லிவ்-இன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், சக நடிகையுடன் சேர்ந்து கொண்டு தன்னை மோசடி செய்து விட்டார் என லாவண்யா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இதுபற்றி போலீசில் அவர் அளித்த புகாரில், ஒரு தசாப்தத்திற்கும் கூடுதலாக இருவரும் ஒன்றாக வசித்தபோதும், தங்களுடைய உறவை ராஜ் தருண் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. மும்பையை சேர்ந்த மற்றொரு நடிகையுடன் அவருக்கு உள்ள தொடர்பால் தன்னை விட்டு விலகி செல்கிறார் என தெரிவித்து இருக்கிறார்.
நாங்கள் இருவரும் கோவிலில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டோம் என புகாரில் தெரிவித்து உள்ள அவர், இதனை சட்டப்படி முறைப்படுத்துவேன் என தன்னிடம் தருண் வாக்குறுதியும் அளித்திருக்கிறார்.
எனினும், அவருடைய அடுத்த படத்தில் நடித்து வரும் சக நடிகையுடன் சேர்ந்து கொண்டு நம்பிக்கை துரோகம் செய்கிறார். 3 மாதங்களாக காணாமல் போய் விட்டார். வேறு யாருடனோ டேட்டிங் செல்கிறார் என்றும் லாவண்யா குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார். அவர் குறிப்பிடும் நடிகை மாளவி மல்கோத்ரா என கூறப்படுகிறது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ராஜ் தருண் மறுத்திருக்கிறார். 10 ஆண்டுகளாக நாங்கள் தொடர்பில் இருந்தோம். எனினும், பிரிந்து விடுவோம் என்று சமீபத்தில் பரஸ்பர ஒப்புதல் ஏற்படுத்தி கொண்டோம். ஆனால், லாவண்யா கூறும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. அடிப்படையற்றவையும் கூட என குறிப்பிட்டு உள்ளார்.
எங்களுக்கு இடையே ரகசிய திருமணம் ஒன்றும் நடைபெறவில்லை என்றும் தவறான தகவல்களை லாவண்யா பரப்பி வருகிறார் என்றும் கூறியுள்ளார். அவரை ஏமாற்றவோ அல்லது தவறாக வழிநடத்தவோ இல்லை என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் போலீசிடம் கூறும்போது, போதை பொருள் வழக்கில் சிக்கி லாவண்யா ஒரு முறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால், ஒருபோதும் இந்த விசயங்களை நான் வெளியில் கூறவோ அல்லது அவருக்கு அவதூறு ஏற்படுத்தவோ இல்லை என்றும் தருண் கூறியுள்ளார்.
இதுபற்றி லாவண்யா அளித்த புகாரில், 45 நாட்கள் போலீஸ் காவலில் இருந்தபோது, தனக்கு ஆதரவாக தருண் எதுவும் செய்யவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். லாவண்யாவின் புகாரை பெற்று கொண்ட போலீசார், இந்த புகார் பற்றி தீவிர விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.
தெலுங்கில், உய்யாலா ஜம்பாலா மற்றும் குமாரி 21 எப் போன்ற படங்களில் ராஜ் தருண் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். சமீபத்தில் நடிகர் நாகார்ஜுனாவுடன் இணைந்து, நா சாமி ரங்கா என்ற படத்தில் அவர் நடித்த வேடம் அதிக கவனம் பெற்றது.