சிகிச்சைக்கு பணம் இன்றி தவிக்கும் பழம்பெரும் நடிகை ஜெய்குமாரி - உருக்கமான பேட்டி

சிகிச்சைக்கு பணம் இன்றி தவிப்பதாக பழம்பெரும் நடிகை ஜெய்குமாரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-18 03:14 GMT

சென்னை:

பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜெய்குமாரி (வயது 72). 1966-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி திரைப்படத்தில் வில்லன் நடிகர் நம்பியாருக்கு கண் தெரியாத தங்கையாக நடித்து திரை உலகில் அறிமுகம் ஆகி உள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெய்குமாரி தற்போது சென்னை வேளச்சேரியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த ஒரு மாத காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு நங்கநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெய்குமாரிக்கு 2 சிறுநீரகங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதுடன் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற டாக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

ஆனால், சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லாத காரணத்தால் ஜெய்குமாரி ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேராமல் சமாளித்து வந்துள்ளார். இந்த நிலையில் வயிற்றுவலி அதிகமானதால், சிகிச்சைக்காக நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவருக்கு வலிநிவாரண மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும், திங்கட்கிழமை (நாளை) ஸ்கேன் முடிவு தெரியவரும் என்றும், அதன் பிறகு நோயின் தாக்கத்திற்கு ஏற்ப உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் இருந்தும் இதுவரை ஆஸ்பத்திரியில் வந்து யாரும் கவனிக்கவில்லை.

இந்தநிலையில் நடிகை ஜெய்குமாரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

என்னை எனது மகன் நன்கு கவனித்த போதிலும், குடும்ப சூழல் காரணமாக தனியாக வசித்து வருகிறேன். அன்றாட செலவுகள் கழிந்தாலும், இது போன்ற நோய்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அளவிற்கு பணம் என்னிடம் இல்லாத காரணத்தால் உயர் சிகிச்சைக்காக இங்கு வந்து சேர்ந்துள்ளேன்.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு என்னை நன்கு தெரியும். தற்போது அவரது மகன் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக உள்ளார். அவர் எனக்கு உயர்தர சிகிச்சை அளிக்க உதவி செய்தால் நன்றாக இருக்கும்.

அதையும், அவரிடம் கேட்க என் மனம் அஞ்சுகிறது. அவரின் கருணை பார்வை என் மீது பட்டால் போதும் என அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்