நிலத்தில் முதலீடு செய்யும் முன்னணி நடிகை
கீர்த்தி சுரேஷ், சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை நிலங்களில் முதலீடு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், அடுத்தடுத்து 'ரஜினி முருகன்', 'தொடரி', 'ரெமோ', 'பைரவா', சாமி 2', 'சண்டக்கோழி 2', 'சர்கார்', 'அண்ணாத்த' போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகி ஆனார். சாவித்திரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளியான 'நடிகையர் திலகம்' படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். சமீபத்தில் தமிழில் வெளியான 'சாணிக்காயிதம்' படத்தில் வெறித்தனமான அவரது நடிப்பு பாராட்டி பேசப்பட்டது.
கீர்த்தி சுரேஷ், சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை நிலங்களில் முதலீடு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தமிழகம், ஆந்திரா, கேரளா, பெங்களூரு போன்ற இடங்களில் அவர் நிலங்களை வாங்கிப் போட்டிருக்கிறார். பெரிய பண்ணைகளை உருவாக்கவும், இயற்கை விவசாயத்தில் ஈடுபடவும் திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக துறை சார்ந்த வல்லுனர் களுடன் அவர் அடிக்கடி கலந்துரையாடி வருகிறார். மேலும் இயற்கை பண்ணை உருவாக்குவது குறித்து நண்பர்களிடமும் கருத்து கேட்டு வருகிறார்.
சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்யும் நட்சத்திரங்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் சம்பாதிக்கும் பணத்தை நிலங்களில் முதலீடு செய்து வரும் கீர்த்தி சுரேஷ், தனது சக நடிகைகளுக்கும் இதே யோசனையை சொல்லி வருகிறார். 'கீர்த்தி சுரேஷ் நிச்சயம் பிழைக்க தெரிந்தவர்தான்' என திரையுலகினர் கருத்து தெரிவித்தும் வருகிறார்கள்.