பிரபல பாலிவுட் தம்பதி விக்கி கவுசல், கத்ரீனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

கொலை மிரட்டல் விடுத்த நபரை மும்பை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.;

Update: 2022-07-25 09:13 GMT

மும்பை,

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்கி கவுசல். இவரது மனைவி பிரபல நடிகை கத்ரீனா கைப். இவர்கள் இருவருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். நீண்ட நாள் காதலுக்கு பிறகு இவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்கள் இருவரும் மும்பையில் உள்ள இல்லத்தில் வசித்து வருகின்றனர்.

இருவரும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது வழக்கம். சமீபத்தில் கூட இவர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுசல் இருவருக்கும் அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதனால் பாலிவுட் ஜோடி இருவரும் மும்பை சாண்டாகுரூஸ் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர்.

இந்த புகாரை ஏற்ற சாண்டாக்ரூஸ் போலீசார் அடையாளம் தெரியாத நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 506-II (குற்றவியல் மிரட்டல்) மற்றும் 354-டி (பின்தொடர்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கொலை மிரட்டல் விடுத்த மன்விந்தர் சிங் என்ற நபரை மும்பை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். கத்ரீனாவின் தீவிர ரசிகரான மன்விந்தர் சிங் கத்ரீனாவை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாக கூறப்படுகிறது. அதனால்தான் கடந்த சில மாதங்களாக, அவர் தொடர்ந்து சமூக ஊடகங்களில் அவர்களை தொந்தரவு செய்து கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்