பாலியல் புகார் : ஜானி மாஸ்டரின் ஜாமீன் ஒத்திவைப்பு
பாலியல் வழக்கில் ஜாமீன் கேட்டு விண்ணப்பிருந்த ஜானி மாஸ்டரின் விண்ணப்பம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.;
ஐதராபாத்,
சிறந்த நடன இயக்குநராக திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் அறிவிக்கப்பட்டார். இவர் தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடலின் மூலம் கவனம் பெற்றார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து, ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா ஆகிய ஹிட் பாடல்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியிருந்தார்.
நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் கடந்த 4 வருடங்களாக பெண் உதவி நடன கலைஞரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அளித்த புகாரில் கடந்த செப்டம்பர் 17ம் தேதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதன் பின்னர் தலைமறைவான ஜானி மாஸ்டரை காவல்துறையினர் கைது செய்தனர். போக்சோ சட்டப் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் அந்தப் பெண் மைனராக இருக்கும்போதிருந்தே அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜானி மாஸ்டர் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், அதெல்லாம் பொய்யென்றும் இது திட்டமிட்ட சதி என ஜானி மாஸ்டர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி பாதிக்கப்பட்ட பெண் மன உளைச்சலை தந்ததாகவும் சினிமாவில் அவப்பெயர் உண்டாக்குவேன் என மிரட்டியதாகவும் ஜானி மாஸ்டர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், ஜானி மாஸ்டர் இது குறித்து புஷ்பா பட இயக்குநர் சுகுமாரிடம் கூறியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜானி மாஸ்டரின் மனைவி ஆயிஷா, "காதல் என்ற பெயரில் பணக்காரர்களை மிரட்டி பணம் சம்பாதிக்கும் முயற்சி இது" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஜாமீன் கேட்டு விண்ணப்பிருந்த ஜானி மாஸ்டரின் விண்ணப்பம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த விசாரணை அக்டோபர் 7ம் தேதிக்கு நடைபெறுமென நீதிமன்றம் தெரிவித்துள்ளது.