20 வயது ஜாக்கி சானை களமிறக்கிய படக்குழு
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 20 வயது இளமை ஜாக்கி சானை அறிமுகப்படுத்தி ஆச்சரியப்பட வைத்திருக்கிறது ‘தி லெஜென்ட்’ படக்குழு.;
சமீபத்தில் நடிகர் ஜாக்கி சானின் 70 வயது தோற்றத்தைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 'ஜாக்கி சானுக்கு வயசாகிருச்சா... எனக் கண்ணீர் விடாத குறையாக கவலைப்பட்டனர். தனது அன்பான ரசிகர்களுக்காக 20 வயது ஜாக்கி சானை களமிறக்கி இருக்கிறது படக்குழு.
சிறுவயதில் இருந்து தாங்கள் பார்த்து ரசித்த நாயகனுக்கு வயதாகி விட்டது என்பதைப் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதிலும் மொழி கடந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்த ஆக்ஷன் நாயகன் ஜாக்கி சான்.சண்டை மட்டும் போடாமல் சீரியஸ் சண்டையிலும் நகைச்சுவையைச் சேர்த்து ஆக்ஷன் காட்சிகளையும் ரசிக்க வைத்தவர்.
அப்படியானவரின் வயதான தோற்றம் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. இதைப் பார்த்தப் பலரும் 'ஜாக்கி சானுக்கு வயசாகிருச்சா...?' எனக் கண்ணீர் விடாத குறையாக புலம்பித் தள்ளினர். பின்பு, அது படத்திற்காகப் போடப்பட்ட கெட்டப் என்றும் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் ஆறுதல் படுத்தினார் ஜாக்கி. இருந்தாலும் அவருக்கு 70 வயதாகி விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்நிலையில், தனது 20 வயது இளமை ஜாக்கி சானை அறிமுகப்படுத்தி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் ஜாக்கி. கடந்த 2005-ம் ஆண்டு 'தி மித்' என்ற படத்தில் நடித்தார் ஜாக்கி. அதன் இரண்டாம் பாகம் 'தி லெஜென்ட்' என்ற பெயரில் இப்போது உருவாகி வருகிறது. இதற்காகதான் தனது 20 வயது ஜாக்கி சானை களம் இறக்கி இருக்கிறார்கள். இது டூப்போ அல்லது டீ ஏஜிங் தொழில்நுட்பமோ கிடையாது என்பதுதான் இன்னொரு ஆச்சரியம்.
ஏஐ தொழில்நுட்பத்தை இதற்காகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதில் இளமையான போர்வீரன் மற்றும் தற்போதைய தோற்றத்தில் ஆராய்ச்சியாளர் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ஜாக்கி. ஏஐ ஜாக்கி சிறப்பாக வந்திருப்பதாகவும் ரசிகர்களுக்கும் இது பிடிக்கும் எனவும் படக்குழு உற்சாகம் தெரிவித்துள்ளது.