விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனை வைத்து படமெடுப்பேன் - சசிகுமார்

விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியனை வைத்து புதிய படம் இயக்கத் திட்டமிட்டுள்ளதாக் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-23 18:08 GMT

சென்னை,

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். அதற்குப்பின் 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இறுதியாக வெளியான 'அயோத்தி' 'கருடன்' ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.

சசி குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'நந்தன்' திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சசிகுமார் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அயோத்தி திரைப்படக் கூட்டணி, 'நந்தன்' படத்திலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிராம பஞ்சாயத்து தேர்தல் மூலம் ஏற்படும் சாதியக் கொடுமைகள் பற்றி நந்தன் திரைப்படம் அழுத்தமாக பேசியுள்ளதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, நேர்காணலில் பங்குபெற்று பேசிய சசிகுமார், " குற்றப்பரம்பரை நாவலைத் திரைப்படமாக்கும் வாய்ப்பு வந்தபோது, இக்கதையை முதலில் இயக்கத் திட்டமிட்டிருந்தவர்கள் என்கிற முறையில் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் பாலாவிடம் சென்று விஷயத்தைச் சொன்னேன். இருவரும் எனக்கு அனுமதி கொடுத்தனர். நாவலின் காப்புரிமையைப் பெற்றிருந்த பாலா அதை எனக்காகக் கொடுத்தார். அதனை இணையத் தொடராக எடுக்க நினைத்தோம். அதற்காக, மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினேன். அவரும் ஒப்புக்கொண்டார். குற்றப்பரம்பரையின் கதைக்காக சண்முக பாண்டியனிடம் தலை முடியை நீளமாக வளர்க்கச் சொன்னேன். அவரும் வளர்த்தார். படத்திற்காக போட்டோஷூட் எடுத்தபோது விஜயகாந்த் போன்றே இருந்தார். ஆனாலும் எனது படப்பிடிப்பு தாமதமான சூழலில் அவரே வந்து படைத்தலைவன் படத்தில் நடிக்க ஒப்புதல் கேட்டார் நானும் சரி என்றேன்.

விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போது என் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடித்திருக்க வேண்டியது. அது நடக்காமல் போய்விட்டது. அந்த வருத்தம் இன்றும் நீடிக்கிறது. குற்றப்பரம்பரையை இயக்குவேனோ இல்லையோ, நிச்சயம் சண்முக பாண்டியனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவேன்." என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்