ஜெமினியும், சாவித்திரியும் நடந்து வந்தனர்

Update:2023-04-06 08:49 IST

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 'காதல் மன்னன்' ஜெமினி கணேசன், 'நடிகையர் திலகம்' சாவித்திரி, கே.ஆர்.விஜயா நடித்த கற்பகம் திரைப்படம் 1963-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி வெளியானது. இந்த படம் கடலூர் பாடலி தியேட்டரில் 150 நாட்களை கடந்த பிறகும் ரசிகர்கள் கூட்டம் குறையாமல் ஓடியது. அது ஒரு குடும்பப் பாங்கான படம்.

கற்பகம் கதைக்குப் பின்னால் ஒரு கதை உண்டு.

'தூண்டாமணி விளக்கு' என்று கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதியதுதான் அந்தக் கதை!

ஆரம்பத்தில் சிவாஜிகணேசன் நடிப்பதாக ஏற்பாடு ஆனது. ஆனால் நிறைவேறாமல் போனது. பிறகு எம்.ஜி.ஆர். நடிப்பார் என்று உறுதியானது. ஓரிரு காட்சிகளும் படமானது. அதற்குமேல் படம் வளராமல் போனது.

அதன்பிறகே ஜெமினிகணேசன் நடிக்க கற்பகம் என்ற பெயரில் படம் உருவானது.

புன்னகை அரசி என்று பின்நாட்களில் ரசிகர்களால் முடிசூட்டப்பட்ட கே.ஆர்.விஜயாவை திரையில் அறிமுகம் செய்தது கற்பகம்தான்.

படத்தின் டைட்டிலான கற்பகம் பெயரில் அவருக்கு கதாபாத்திரம் கிடைத்தது கூடுதல் பெருமை.

ஜெமினி கணேசனுக்கு முதல் மனைவியாக வரும் கற்பகம், இடையில் இறந்து விடுவார். அவரது இழப்பை தாங்க முடியாமல் ஜெமினி தவித்து வருவார். இரண்டாம் திருமணம் செய்ய அவரை மாமனார் வற்புறுத்த கற்பகத்தின் தோழியான அமுதாவை (சாவித்திரி) இரட்டை மனதுடன் இரண்டாம் மணம் செய்துகொண்டு, முதல் மனைவியின் நினைவுகளை மனதில் சுமந்துகொண்டு அவர் தவிப்பது போல் கதை போகும்...

கணவன், மனைவி, குழந்தைப் பாசத்தை மையமாகக் கொண்ட அந்தப் படத்திற்கு மக்களிடம் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. 1964-ம் ஆண்டில் சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. கற்பகம் என்ற பெயரில் ஸ்டூடியோவை நிறுவும் உயரத்தில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை ஏற்றியும் விட்டது!

கற்பகம் படத்தின் வெள்ளி விழாவைக் கொண்டாட கடலூர் பாடலி தியேட்டர் தயாரானது. ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோர் நேரில் வரயிருப்பதாக அறிவித்தனர்.

தகவல் அறிந்த கடலூர் மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முந்தைய நாளே திருப்பாதிரிப்புலியூரில் ஒன்று திரண்டனர். பாடலி தண்டபாணி செட்டியார் வீடு முதல் பாடலி தியேட்டர் வரை ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஜெமினியும், சாவித்திரியும் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயசெட்டி தெருவில் இருந்த, பாடலி தண்டபாணி செட்டியார் வீட்டிற்கு வந்தார்கள். அங்கு காலை உணவை அருந்திவிட்டு, விழா நடைபெறும் பாடலி தியேட்டருக்குப் புறப்படத் தயாரானார்கள். ஆனால் வீட்டை சுற்றிலும் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. கார், வாகனம் எதுவும் கூட்டத்திற்குள் புகுந்து செல்ல முடியவில்லை. அதனால் வேறு வழியில்லாமல் ஜெமினி கணேசனும், சாவித்திரியும் பாடலி தியேட்டருக்கு நடந்தே சென்று வெள்ளி விழாவில் கலந்து கொண்டனர்.

மாலையில் கடலூர் டவுன்ஹாலில் அப்போதைய கலெக்டர் அம்ரோஸ் தலைமையில் விருது வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பாடலி தியேட்டரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டவுன்ஹாலுக்கு ரசிகர்கள் வெள்ளத்தில் ஜெமினிகணேசனும், சாவித்திரியும் நடந்தே அல்ல; மிதந்தே சென்று கலெக்டரிடம் விருதைப் பெற்றுக் கொண்டனர் என்று பெருமையாச் சொல்கிறார்கள்.

ஜெமினி கணேசனும், சாவித்திரியும் கடலூர் வந்து சென்ற பிறகு ஒருமுறை, பாடலி தண்டபாணி செட்டியார் தன்னுடைய மகன் சங்கருடன் நடிகை சாவித்திரியைப் பார்க்க சென்னையில் இருந்த அவரது வீட்டுக்குப் போனார். அவர்களை அன்புடன் உபசரித்த சாவித்திரி, 'கடலூர் வந்தால் எங்களை எப்படியெல்லாம் கனிவுடன் கவனிக்கிறீர்கள்? எங்கள் வீட்டில் சாப்பிடாமல் போகக் கூடாது!' என்று அன்புக் கட்டளையிட, அவர்களும் அவரது வீட்டில் உணவு அருந்திவிட்டு வந்தார்கள்.

அங்கே சாவித்திரியின் கனிவான உபசரிப்பு மட்டும் அல்ல; அவர் வசித்துவந்த கலைநுட்பத்தோடு கூடிய வீடும், பாடலி தண்டபாணிக்குப் பிடித்துப் போனது. கடலூர் திரும்பியதும் உடனடியாக, சாவித்திரி வசித்த வீட்டைப் போலவே ஓர் அழகான புதிய வீட்டைக் கட்டிவிட்டார், என்றால் பாருங்களேன்?

Tags:    

மேலும் செய்திகள்