எனது புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி- பிரபல பாடகி புகார்
தனது புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருவதாக, பிரபல பாடகி எச்சரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல சினிமா பின்னணி பாடகி கீதா மாதுரி. இவர் பாகுபலி படத்தில் இடம்பெற்றுள்ள ஜீவநதி, தோழா படத்தில் வரும் டோர் நம்பர், சிவலிங்கா படத்தில் இடம்பெற்றுள்ள ரங்கு ரக்கர உள்ளிட்ட பல பாடல்களை பாடி இருக்கிறார்.
தெலுங்கில் அதிக படங்களில் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ், தமன், கீரவாணி, தேவிஸ்ரீபிரசாத், மணிசர்மா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி உள்ளார். ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கீதா மாதுரி தனது புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி நடப்பதாக பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து சமூக வலைத்தள பக்கத்தில் கீதா மாதுரி வெளியிட்ட பதிவில், ''மர்ம நபர்கள் சிலர் எனது புகைப்படத்தை வாட்ஸ்-அப் டி.பி.யில் வைத்து மோசடியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் அமெரிக்க எண்ணில் இருந்து பேசி பிரபலமானவர்களின் செல்போன் எண்களையும் கேட்கிறார்கள். அது நான் அல்ல. மோசடி நபர்களிடம் யாரும் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். கீதா மாதுரி பதிவு வைரலாகி வருகிறது.