'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!
விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.;
சென்னை,
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் 'தங்கலான்'. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டு அவரின் விலா எலும்பு முறிந்தது. இதனால் விக்ரம் சிறிது காலம் படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் விக்ரம் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார்.
இந்த நிலையில், தற்போது தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக விக்ரம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். மேலும் இது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு அவர், "படப்பிடிப்பு நிறைவடைந்தது! என்ன ஒரு பயணம்!! மிகவும் அற்புதமான சிலருடன் பணிபுரிந்ததில் ஒரு நடிகராக மிகவும் உற்சாகமான சில அனுபவங்களைப் பெற்றேன். முதல் புகைப்படத்திற்கும் கடைசி புகைப்படத்திற்கும் இடையே 118 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இந்த கனவை வாழ வைத்ததற்கு நன்றி ரஞ்சித். ஒவ்வொரு நாளும்" என்று பதிவிட்டுள்ளார்.