படம் தோல்வி: நஷ்டஈடு வழங்க சார்மி சம்மதம்
லைகர் படம் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து வினியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு வழங்க சார்மியும், பூரிஜெகன்னாத்தும் சம்மதித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.;
தெலுங்கு நடிகையான சார்மி தமிழில் காதல் அழிவதில்லை, காதல் கிசுகிசு, ஆஹா எத்தனை அழகு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிப்பதை நிறுத்திவிட்டு பிரபல தெலுங்கு டைரக்டர் பூரி ஜெகன்னாத்துடன் இணைந்து படங்கள் தயாரித்து வருகிறார். சமீபத்தில் சார்மி தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா நடித்து வெளிவந்த லைகர் படம் படுதோல்வி அடைந்தது. இந்த படத்தை பூரிஜெகன்னாத் இயக்கி இருந்தார். தோல்வி காரணமாக விஜய் தேவரகொண்டா தனது சம்பளத்தில் ரூ.6 கோடியை திருப்பி கொடுத்து விட்டார். இந்த நிலையில் வினியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்டு போர்க்கொடி உயர்த்தினர். ஆனால் சார்மி நஷ்டஈடு வழங்க மறுத்ததாக கூறப்பட்டது. இதனால் அவர் மீது தெலுங்கு வர்த்தக சபையில் புகார் அளிக்க வினியோகஸ்தர்கள் முடிவு செய்தனர். இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு பிறகு சமரசம் ஏற்பட்டு வினியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு வழங்க சார்மியும், பூரிஜெகன்னாத்தும் சம்மதித்து இருப்பதாகவும், ஏரியா வாரியாக நஷ்டஈடு தொகையை வழங்கி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.