பொங்கல் அன்று மட்டுமே விவசாயிகளை நினைக்கக் கூடாது -கார்த்தி பேச்சு

நாம் தினம் உண்ணும் உணவை வழங்கும் விவசாயிகளுக்கு நன்றி கூற மறந்துவிடுகிறோம். நமக்கான உணவை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளைக் கொண்டாட வேண்டும்.

Update: 2024-01-11 16:48 GMT

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கவுரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுன்டேஷனின் 'உழவர் விருதுகள் 2024' விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் ஓவியருமான சிவகுமார், நடிகை ரோகிணி, நடிகர் மற்றும் இயக்குனர் தம்பி ராமையா, நடிகர் பசுபதி மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் கலந்துக் கொண்டார்கள்.

இவர்களோடு மருத்துவர் கு.சிவராமன், பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், வேளாண் செயற்பாட்டாளர் பாமயன் மற்றும் OFM அனந்து ஆகியோரும் கலந்துக் கொண்டார்கள். மேலும் வேளாண் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்ட இந்த விழா இனிதே நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டையும் போலவே இந்த ஆண்டும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதோடு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி பேசும்போது, "ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பொங்கல் வைத்து இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி சொல்கிறார்கள். அந்த நாளைத்தான் நாம் பொங்கல் திருநாளாக கொண்டாடுகிறோம். ஆனால், நாம் தினம் உண்ணும் உணவை வழங்கும் விவசாயிகளுக்கு நன்றி கூற மறந்துவிடுகிறோம். அவர்களுக்கு என்றென்றுமே நன்றி கூற வேண்டும். பொங்கல் அன்று மட்டுமே விவசாயிகளை நினைக்கக் கூடாது.

சினிமா, விளையாட்டு உள்ளிட்ட அனைத்திலுமே வெற்றி பெறும் போது விழா வைத்துக் கொண்டாடுகிறோம். எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் நிலையிலும் நமக்கான உணவை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளைக் கொண்டாட வேண்டும் என்று தான் உழவர் விருதுகள் விழாவினைத் தொடங்கினோம்.

இது 5-வது ஆண்டு விழா. பல்வேறு வேளாண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்திருப்பது பெருமையாக இருக்கிறது. இந்த விருதின் மூலம் அவர்களுடைய வாழ்வில் ஒரு சிறு வெளிச்சத்தை ஏற்படுத்தி விடமுடியும் என்று நம்புகிறோம். வரும் காலங்களிலும் இதுப்போல விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் நல் உள்ளங்களை அடையாளப்படுத்தி கவுரவப்படுத்துவதோடு, விவசாயத்திற்கான பங்களிப்பையும் உழவன் ஃபவுண்டேஷன் தொடர்ந்து செய்யும்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்