பன்மைத் தன்மையை பேசுபவை எல்லாம் இடதுசாரி சிந்தனைதான் - பாடல் வெளியீட்டு விழாவில் தொல்.திருமாவளவன் பேச்சு

கற்பு பூமி பட பாடல் வெளியீட்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதில் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-24 07:48 GMT

சென்னை,

நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் 'கற்பு பூமி'. முன்னணி நடிகர் நடிகைகள் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் கதை பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்வு நேற்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "நேசமுரளி முற்போக்கான இயக்குநர். சொல்லப் போனால் இடதுசாரி சிந்தனையுள்ள இளைஞர். வணிக நோக்கில் படங்களை இயக்க வேண்டும் என்று நினைக்காமல், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம், ஆனால் சமூகச் சிக்கல்கள் குறித்த உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் வகையில், இளைய, புதிய தலைமுறையினரை முற்போக்காக சிந்திக்கத் கூடிய உந்துதலை, தூண்டலை கொடுக்கும் திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்கின்ற வேட்கை உள்ளவர்.

படமாக்கி பணமாக்க வேண்டும் என்பதல்ல அவரின் நோக்கம். அவர் உள்வாங்கி இருக்கும் அரசியல் கோட்பாடுதான் அவரை துணிவாக இருக்கும்படி இயங்கும்படி தூண்டிக்கொண்டும் இயக்கிக் கொண்டும் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

பொள்ளாச்சியில் நடந்தது அவ்வளவு குரூரமானது. அதனைத் தடுக்க நாம் என்ன செய்திருக்கிறோம். அதனை என்றால் அந்தப் போக்கினை அது போல் வளர்ந்து வரும் கலாச்சாரத்தினை. சமூக ஊடகம் வளர்ந்திருக்கும் இந்தக் காலச்சூழலில் இந்தப் போக்கு வளருவது எவ்வளவு ஆபத்தானது. எதிர்காலம் எத்தகையதாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்தால் நெஞ்சு பதறுகிறது. அப்படிப்பட்ட குரூரமான நிகழ்வை படைப்பாக்க வேண்டும் என்று முடிவு செய்து துணிச்சலான முடிவு.

எங்கு சனாதனம் இருக்கிறது என்று கேட்கிறார்கள் வரலாற்றுப் பின்னணி தெரியாதவர்கள். ஏன் சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்கிறார்கள் வரலாற்றுப் பின்னணி தெரியாதவர்கள். ஏன் அந்தக் கட்சியினை வெறுக்கிறீர்கள் என்கிறார்கள் வரலாற்றுப் பின்னணி தெரியாதவர்கள். ஆர்.எஸ்.எஸ் ஒரு இயக்கம் தானே..? அதை எதிர்த்து ஏன் பேச வேண்டும் என்று கேட்கிறார்கள் வரலாற்றுப் பின்னணி தெரியாதவர்கள்.

வரலாற்றுப் பின்னணி தெரிந்து கொண்டால் நிச்சயமாக இந்தக் கேள்விகளே எழாது. தனிப்பட்ட முறையிலே நமக்கு எந்த அரசியல் பகையுமே இல்லை. இது ஒரு கோட்பாட்டுப் பகை. கவுதம புத்தர் காலத்தில் இருந்து தொடரும் ஒரு யுத்தம் இது. இந்த யுத்தம் 2,500 ஆண்டுகளாகத் தொடர்கிறது.

'கற்பு பூமி' என்பதில் என்ன சிக்கல் இருக்கிறது..? இதில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எங்கே உருவாகிவிடப் போகிறது. பெண்களுக்கு எதிரான குரூரம் இந்த மண்ணில் அரங்கேறி இருக்கிறது. அதை அம்பலப்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு ஏன் 109 வெட்டுகள்? நேசமுரளி உள்வாங்கி இருக்கும் இடதுசாரி அரசியல்தான், அதாவது கம்யூனிஸ்ட் சிந்தனை அல்ல, வலதுசாரி சிந்தனைக்கு எதிரான எல்லாமே இடதுசாரி சிந்தனைதான்.

பழமைவாதத்திற்கு எதிரான, ஜனநாயகத்தைப் பேசும் அனைத்து சிந்தனையும் இடதுசாரி சிந்தனைதான். பன்மைத் தன்மையை பேசுபவை எல்லாம் இடதுசாரி சிந்தனைதான்" என்று அவர் கூறினார்.

இதனையடுத்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், "எங்கெல்லாம் அதிகார அத்துமீறல் நடக்கிறதோ அதைத் தோலுரித்துக் காட்டி அவர்களை மக்களிடம் அம்பலப்படுத்தும் மகத்தான பணியை இயக்குநரும், தயாரிப்பாளரும் செய்திருக்கிறார்கள். ஆனால் இதை அங்கீகரிக்கும் சமூகமாக, அரசாக, சென்சார் போர்டாக சமகால சமூகம் இருக்கிறதா என்பதுதான் கேள்வி" என்று அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய இந்திய மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், "'கற்புபூமி' படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான நேசமுரளி சினிமாவிற்கும் அரசியலுக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு படத்தை எடுப்பதோடு உங்கள் நோக்கம் முழுமையடைந்து விடாது. அதை மக்கள் பார்க்கும் போதுதான் உங்கள் நோக்கம் முழுமையடையும். எனவே இது போன்ற தடைகளைத் தாண்டி எப்படி படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது என்பது குறித்து புத்திசாலித்தனமாக யோசிக்க வேண்டும். நாட்டில் நடக்கும் குற்ற நிகழ்வுகள் குறித்து இளைஞர்கள் பேச முன்வர வேண்டும். இயக்குநர் நேசமுரளி இது போன்ற சமூக அக்கறை கொண்ட பல படங்களை உருவாக்கி வெற்றி பெற வேண்டும்" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்