தெலுங்கானா முதல்-மந்திரியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு!
தெலுங்கானா முதல்-மந்திரியை தெலுங்கு நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஐதராபாத்,
ஐதராபாத்தில் 'புஷ்பா 2' திரைப்படம் வெளியான போது நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரின் மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தனர். இந்த விவகாரம் குறித்து தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சட்ட சபையில் பேசினார். அப்போது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் அந்த திரைப்படங்களுக்கான சலுகைகள் ரத்து செய்யப்படும். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜு தலைமையில் 36 பேர் கொண்ட குழுவினர் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியை இன்று ஐதராபாத்தில் சந்தித்தனர். இந்த குழுவில் நடிகர்கள் வெங்கடேஷ், நிதின், வருண் தேஜ், சிவ பாலாஜி, இயக்குனர்கள் திரி விக்ரம், ஹரிஷ் சங்கர், அணில், பாபி, வம்சி, தயாரிப்பாளர்கள், அல்லு அரவிந்த், டக்குபதி சுரேஷ், சுனில், சுப்ரியா, நாகவம்சி, இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி உள்ளிட்டோர் இருந்தனர்.
இதில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது விவகாரம் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. சினிமா டிக்கெட் விலை உயர்வு, சிறப்பு காட்சிகள், சினிமா பட கலைஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களின் பணி பாதுகாப்பு, சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்கான சிறப்பு அனுமதி வழங்குதல், சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் திரைப்படங்களுக்கு சலுகைகள் வழங்குதல் உள்ளிட்டவைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பின்போது பேசிய முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, 'சட்டம் - ஒழுங்கு விஷயங்களில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது, தெலுங்கு திரையுலகுக்கு அரசு துணை நிற்கும்' எனக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.