போதை விருந்து வழக்கு - நடிகைக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க முடிவு

போதை விருந்தில் பங்கேற்றதுடன் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வரும் நடிகை ஹேமாவுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Update: 2024-06-03 03:34 GMT

பெங்களூரு,

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி அருகே ஆனேக்கல் தாலுகா ஹெப்பகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கோபால ரெட்டி என்பவரது பண்ணை வீட்டில் கடந்த மாதம் (மே) 19-ந் தேதி போதை விருந்து நடைபெற்றிருந்தது. இந்த போதை விருந்தில் தெலுங்கு நடிகை ஹேமா உள்பட 101 பேர் பங்கேற்று இருந்தார்கள். இந்த விருந்தில் கலந்து கொண்டவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, விருந்துக்கு ஏற்பாடு செய்த வாசு, போதைப்பொருள் வியாபாரிகள் உள்பட 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அத்துடன் விருந்தில் பங்கேற்றவர்களுக்கு போலீசார் மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில் போதை விருந்தில் பங்கேற்ற 101 பேரில், நடிகை ஹேமா உள்பட 88 பேர் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகை ஹேமா உள்பட 8 பேருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினார்கள்.

அதாவது கடந்த மாதம் 27-ந் தேதி ஹேமாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் உடல் நலக்குறைவால், தன்னால் ஒரு வாரம் விசாரணைக்கு ஆஜராக முடியாது என்றும், கால அவகாசம் வழங்கும்படியும் ஹேமா கேட்டு இருந்தார். இதையடுத்து, கடந்த 1-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகை ஹேமா உள்பட 8 பேருக்கு 2-வது முறையாக போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்திருந்தார்கள். ஆனால் ஹேமா உள்பட 8 பேரும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனால் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வரும் நடிகை ஹேமா உள்பட 8 பேருக்கும் எதிராக கைது வாரண்டு பிறப்பிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக இன்று (திங்கட்கிழமை) சட்டப்படி கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, ஹேமாவுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது நோட்டீஸ் அனுப்பி வைத்தும் விசாரணைக்கு ஆஜராகாததால், அந்த காரணத்தை மையமாக வைத்து கைது வாரண்டு பிறப்பிக்க போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்