நீதிமன்றம் மூலமே பாலியல் தொல்லைக்கு நியாயம் கிடைக்கும் - நடிகர் அர்ஜுன்

எல்லா இடங்களிலும் பெண்களுக்குப் பாலியல் தொல்லை பிரச்சினை இருக்கிறது. அனைத்து இடங்களுக்கும் சென்று ஹீரோ காப்பாற்ற முடியாது என்று நடிகர் அர்ஜுன் கூறியுள்ளார்.;

Update:2024-09-03 20:32 IST

சென்னை,

நாட்டையே உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழு தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை கேரள அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து பல நடிகைகள், நடிகர்கள், டைரக்டர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்திடம் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், தனக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது என்று கூறி நழுவினார்.

மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லாலும் பாலியல் தொல்லை குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். கேரள நடிகர்களோ, அனைத்து மொழிகளின் சினிமாத்துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் குறித்த பிரச்சினைகள் இருப்பதாகவும் ஹேமா கமிட்டி அறிக்கையால் இந்த விவகாரம் கேரளாவில் வெளிவந்துள்ளதாகவும் சமாதானம் கூறி வருகின்றனர்.

மோகன்லால் ' மலையாள திரையுலகில் பல நடிகர்கள் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தை குறை கூறுவது சரியல்ல. நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை.. இங்கேயேதான் இருக்கிறேன்.. குழு கலைக்கப்பட்டாலும் அம்மா சங்கத்தின் செயல்பாடுகளில் பாதிப்பு இல்லை' என கூறினார்.

செய்தியாளர்கள் நடிகர் அர்ஜுனிடம் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி கேட்டபோது, "சினிமா துறையில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் பெண்களுக்குப் பாலியல் தொல்லை பிரச்சினை இருக்கிறது. அனைத்து இடங்களுக்கும் சென்று ஹீரோ காப்பாற்ற முடியாது. நீதிமன்றம் மூலமே இதற்கு நியாயம் கிடைக்கும். அனைவருக்கும் பொறுப்புணர்வு இருக்க வேண்டும்" என்றார்

2017-ம் ஆண்டு மலையாள திரைப்பட நடிகை ஒருவருக்கு நடிகர் திலீப் தூண்டுதலில் நடந்த பாலியல் தொல்லை கொடூரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்