திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய டி.ஜி.பிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-11-20 07:01 GMT

சென்னை,

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.

நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை திரிஷா 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தார். அவர் அந்த பதிவில், 'மன்சூர் அலிகான் என்னைப்பற்றி மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான முறையில் பேசும் வீடியோ குறித்து நான் கேள்விப்பட்டேன். அவரை போன்றவருடன் இனிமேல் ஒருபோதும் திரைப்படங்களில் நடிக்கமாட்டேன். மன்சூர் அலிகானை போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்டப்பெயரை கொண்டு வருகின்றனர்' என்று தெரிவித்திருந்தார்.

நடிகை திரிஷாவுக்கு ஆதரவாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். மேலும் பல ரசிகர்கள், மன்சூர் அலிகானின் இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது என்று தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்து வந்தனர். இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் மன்சூர் அலிகான் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய தமிழக டி.ஜி.பிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஐபிசி சட்டபிரிவு 509 பி மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களை பயன்படுத்தி மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டும் இதுபோன்ற கருத்துகள் கண்டிக்கப்பட வேண்டும் எனவும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்