22 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த சிரஞ்சீவி - ரவிதேஜா

சிரஞ்சீவியுடன் இணைந்து ‘வால்தேர் வீரய்யா’ என்ற படத்தில் பணியாற்றி வருகிறார், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ரவிதேஜா.;

Update:2023-01-06 20:37 IST

முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில், சினிமாவிற்குள் நுழைந்த புதிதில் இணைந்து நடிக்கும் ஒருவர், தானும் முன்னணி நடிகராக மாறிய பின், அதே நடிகருடன் இணைந்து பணியாற்றுவது என்பது சினிமா உலகில் நடக்காத காரியமாக இருந்தது.

ஆனால் இரண்டு பெரிய கதாநாயகர்கள் ஒன்றிணைந்து நடிக்கும் வழக்கம், தற்போது இந்தியாவின் அனைத்து மொழி சினிமாக்களிலும் சாத்தியமான ஒன்றாக மாறி வருகிறது. தெலுங்கு சினிமாவில் 2013-ம் ஆண்டு வெளியான 'சீத்தம்மா வாகிட்லோ சிரிமல்லே செட்டு' என்ற படத்தில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவும், நடிகர் வெங்கடேசும் இணைந்து நடித்தனர்.

இந்த காலகட்டத்தில் இருவருமே நிறைய ரசிகர் பட்டாளங்களை வைத்திருந்த முன்னணி கதாநாயகர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் தெலுங்கு சினிமா ரசிகர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை ரசிகர்களாக வைத்திருக்கும் பவன்கல்யாண் மற்றும் வெங்கடேஷ் இருவரும் இணைந்து 2015-ம் ஆண்டு 'கோபாலா கோபாலா' என்ற படத்தில் பணியாற்றினர்.

அந்த வகையில் தற்போது தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகரான சிரஞ்சீவியுடன் இணைந்து 'வால்தேர் வீரய்யா' என்ற படத்தில் பணியாற்றி வருகிறார், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ரவிதேஜா. சினிமாவிற்குள் நுழைந்த புதிதில் அவர் நிறைய சிறுசிறு கதாபாத்திரங்களை செய்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் 2000-ம் ஆண்டு சிரஞ்சீவியுடன் இணைந்து 'அண்ணய்யா' என்ற படத்தில், அவருக்கு தம்பியாக ரவிதேஜா நடித்திருந்தார்.

அதன்பிறகு தனி கதாநாயகனாக உருவெடுத்து அசுர வளர்ச்சியடைந்து, தனக்கென ஒரு தனி இடத்தையும், ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு, சிரஞ்சீவியும், ரவிதேஜாவும் இணைந்து பணியாற்றும் படம்தான் 'வால்தேர் வீரய்யா'.

இந்தப் படத்தில் வால்தேர் வீரய்யா கதாபாத்திரத்தில் சிரஞ்சீவியும், உதவி போலீஸ் கமிஷனராக விக்ரம் சாகர் ஐ.பி.எஸ். என்ற கதாபாத்திரத்தில் ரவிதேஜாவும் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஸ்ருதிஹாசன், கேத்தரின் தெரசா ஆகியோரும், வில்லனாக பாபிசிம்ஹாவும் நடித்துள்ளனர். பல படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதை எழுதி, 2014-ம் ஆண்டு ரவிதேஜா நடிப்பில் உருவான 'பவர்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கே.எஸ்.ரவீந்திரா.

இவர்தான் 'வால்தேர் வீரய்யா' படத்திற்கு கதை எழுதி இயக்கவும் செய்துள்ளார். பவன்கல்யாண் நடிப்பில் 'சர்தார் கப்பர்சிங்', ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் 'ஜெய் லவகுசா', வெங்கடேஷ் மற்றும் நாகசைதன்யா நடிப்பில் 'வெங்கி மாமா' ஆகிய வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குனர் என்பதால், சிரஞ்சீவியும், ரவிதேஜாவும் இணைந்த 'வால்தேர் வீரய்யா' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மகர சங்கராந்தியை முன்னிட்டு 'வால்தேர் வீரய்யா' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சிரஞ்சீவி டான் கதாபாத்திரத்திலும், ரவிதேஜா போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் இருந்து, பாஸ் பார்ட்டி, நுவ்வு ஸ்ரீதேவி ஐதே நேனு சிரஞ்சீவி, வால்தேர் வீரய்யா தீம் பாடல்கள் வெளியாகிய நிலையில் கடந்த டிசம்பர் 30-ந் தேதி 'பூனகாலு..' என்ற பாடல் வெளியானது. இதனை முன்னிட்டு, தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகர் ரவிதேஜா, அந்த பாடலுக்கான போஸ்டரை வெளியிட்டு, "அண்ணய்யாவுடன் இணைந்து நடனமாடுவது எப்போதும் சிறப்புதான். இந்தப் பாடல் ரசிகர்களின் மனதை துள்ளவைக்கும்" என்று கூறியிருந்தார். தற்போது இந்தப் பாடலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்