கமல் பயன்படுத்திய புல்லட் பைக் : ஏ.வி.எம். நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி...!

நடிகர் கமல்ஹாசன் நாளை தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Update: 2023-11-06 14:43 GMT

Image Credits : Twitter.com/@avmproductions

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 1989ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சகலகலா வல்லவன்'. இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்த படத்தில் அம்பிகா, துளசி, ரவீந்திரன், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் இளையராஜா இசையில் 'இளமை இதோ... இதோ...' என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். அந்த பாடலை தற்போது வரை ஒவ்வொரு புது வருடப்பிறப்புக்கும் பல்வேறு தொலைக்காட்சிகள் மற்றும் ரேடியோக்களில் ஒளிபரப்பி வருகின்றனர். மேலும் பலர் தங்களது சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கு இந்த பாடலை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நாளை தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்தநாளை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். அவரின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் சார்பாக மாநிலம் முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ.வி.எம். நிறுவனம் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் 'இளமை இதோ... இதோ...' பாடலில் கமல்ஹாசன் பயன்படுத்திய 1980ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட புல்லட் பைக்கை நாளை முதல் ரசிகர்கள் பார்வைக்கு வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏ.வி.எம். நிறுவனம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், 'உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் பரிசாக, 'இளமை இதோ... இதோ...' கமல்ஹாசன் பயன்படுத்திய 1980ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட புல்லட் பைக்கை நாளை ஏ.வி.எம். மியூசியத்தில் ரசிகர்கள் பார்வைக்கு வைக்க உள்ளோம். ரசிகர்கள் வந்து பார்த்துக்கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளனர். ஏற்கனவே நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ள நிலையில் ஏ.வி.எம். நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்