இந்தி பிக்பாஸில் கழுதை: சல்மான் கானுக்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கழுதை பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சல்மான் கானுக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.;
மும்பை,
நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கியது. 2006-ம் ஆண்டு தொடங்கிய இந்தி பிக்பாஸ் சீசன் 1 தற்போது 18-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் நடிகையான ஸ்ருதிகா பங்கேற்றுள்ளார்.
தொலைக்காட்சி நடிகர்கள், சமூகவலைதள பிரபலங்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். ஹவுஸ்மேட்களுக்கு ஒரு டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதாவது காதராஜ் என்ற புனைபெயர் கொண்ட ஒரு கழுதையை ஹவுஸ்மேட்கள் பராமரிக்க வேண்டும். இதற்காக கழுத்தைக்கு அங்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புரோமோ வெளியான நிலையில், சல்மான் கான் மற்றும் பிக் பாஸ் தயாரிப்பாளர்களுக்கு பீட்டா இந்தியா கடிதம் எழுதியுள்ளது.அதில், "பிக்பாஸ் வீட்டில் கழுதையை வைத்திருப்பதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து எங்களுக்கு புகார்கள் வந்தன. உடனடியாக அந்த கழுதையை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் கழுதையை பயன்படுத்துவது ஒன்றும் நகைப்புக்குரிய விஷயமல்ல.
இயற்கையாகவே கழுதைகள் அதிகம் பதற்றப்படும் குணமுடையவை. அதிலும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வரும் சத்தம், லைட்டிங், இவையெல்லாம் சேர்த்து இன்னும் அதை பயமுறுத்தும். அதுவும் குறிப்பாக சிறிய இடத்தில் வைக்கப்பட்டுள்ள கழுதை குறித்து பொதுமக்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்" என அதில் கூறப்பட்டுள்ளது.