வருண் தவானின் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் வெளியிட்ட 'பேபி ஜான்' படக்குழு
‘பேபி ஜான்’ படம் மூலம் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.;
சென்னை,
பிரபல இயக்குனர் அட்லீ. இவர் 'ஜவான்' படம் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து வரவேற்பை பெற்றது.
தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தை அட்லீயின் மனைவி பிரியாஅட்லீ தயாரிக்கிறார். படத்துக்கு 'பேபி ஜான்' என பெயரிடப்பட்டுள்ளது. வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜனவரி 14-ம் தேதி பூஜையுடன் தொடங்கின. தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகிறார்.
இந்நிலையில், நடிகர் வருண் தவான் இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. 'பேபி ஜான்' படம் அடுத்த மாதம் 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.