கமலுடன் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை - அட்லி
'இந்தியன் 2' வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் அட்லி நடிகர் கமல்ஹாசனை பாராட்டி பேசியுள்ளார்.;
சென்னை,
இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமல்ஹாசன், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் 'இந்தியன் 2' படத்தில் இடம்பெற்றுள்ள "கதறல்ஸ்" என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலானது.
படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன்1-ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
'இந்தியன் 2' பல மொழிகளில் ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிட தயாராக உள்ளது. இந்தநிலையில் இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. டிரைலர் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் மற்றும் நடன இயக்குனர்கள் போஸ்கோ, சீசர் மற்றும் 'ஜவான்' பட இயக்குநர் அட்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய இயக்குநர் அட்லி, "நான் ஷங்கர் சாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியபோது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பே 'இந்தியன் 2' கதை பற்றி இருவரும் உரையாடியிருக்கிறோம். நிச்சயம் இத்திரைப்படம் இந்திய சினிமாவிற்குப் பெருமை சேர்க்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.
இந்திய சினிமாவின் பைபிள் கமல். அவர் சினிமாவுக்காக அனைத்தையும் கொடுத்திருக்கிறார். அவரது படங்களைப் பார்த்து சினிமா கற்றுக் கொண்டுதான் நான் சினிமாவிற்கு வந்தேன். என் மகன் மீர், நாளை சினிமா பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினால் முதலில் கமல் சார் படத்தைத்தான் பார்க்கச் சொல்லுவேன். கமல் சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.