பண்ணை வீட்டு போதை விருந்து - நடிகை ஹேமாவுக்கு மீண்டும் நோட்டீஸ்
நடிகை ஹேமா உள்பட 8 பேருக்கு குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.;
பெங்களூரு,
பெங்களூரு புறநகர் எலெக்ட்ரானிக் சிட்டி அருகே கோபால ரொட்டி என்பவருக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இங்கு கடந்த 19-ந் தேதி மதுவிருந்து நடைபெற்றது. இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை பொருட்கள் சிக்கின. மேலும் பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் போதை விருந்து நடைபெற்றது தெரிந்தது. இதில் தெலுங்கு நடிகைகள் ஹேமா, ஆஷா ராய் உள்ளிட்டோரும், ஐ.டி. ஊழியர், அரசியல் பிரபலங்கள் என பலரும் பங்கேற்று இருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் பிடித்தனர்.
இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான ஐதராபாத்தை சேர்ந்த வாசு, போதைப்பொருட்கள் வியாபாரிகள் 3 பேர் என ஒட்டுமொத்தமாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது ஹெப்பகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இதற்கிடையே இந்த வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. நடிகைகள் ஹேமா, ஆஷா ராய் ஆகியோர் போதை விருந்தில் பங்கேற்கவில்லை என மறுப்பு தெரிவித்து இருந்த நிலையில், நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில் விருந்தில் பங்கேற்றவர்களில் நடிகைகள் உள்பட 86 பேர் போதை பொருட்களை உட்கொண்டது உறுதியானது.
இதையடுத்து விசாரணைக்கு ஆஜராக கோரி அவர்களுக்கு போலீஸ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் காலையில் தெலுங்கு நடிகை ஹேமா விசாரணைக்காக நேரில் ஆஜராக கோரப்பட்டு இருந்தது. ஆனால் தனக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாக கூறிய நடிகை ஹேமா, விசாரணைக்கு ஆஜராகுவதற்கு 7 நாட்கள் கால அவகாசம் கோரினார்.
இந்த நிலையில் கால அவகாசம் கோரப்பட்டுள்ள நிலையில் நடிகை ஹேமா உள்பட 8 பேருக்கு குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அதில் போதை விருந்து தொடர்பாக விளக்கம் அளிக்க நேரில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
பண்ணை வீட்டு போதை விருந்து தொடர்பாக வாசு, அருண், சித்திக், நாகபாபு உள்பட 5 பேருக்கு 10 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டு இருந்தது. அவர்களை நேற்று முதல் போலீசார் காவலில் வைத்து போதைவிருந்து தொடர்பாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.