டோலிவுட்: 2 நாயகர்களை இணைக்க நினைக்கும் தயாரிப்பாளர்

அல்லு அர்ஜூன் மற்றும் ராம்சரணை இணைத்து மிகப்பெரிய பட்ஜெட் படம் இயக்க, அல்லு அரவிந்த் முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-25 09:52 GMT

தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர், அல்லு அரவிந்த். அதே தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சிரஞ்சீவி. அல்லு அரவிந்த், சிரஞ்சீவியை கதாநாயகனாக வைத்து பல படங்களை ஆரம்ப காலத்தில் தயாரித்திருக்கிறார். அல்லு அரவிந்தின் தங்கை சுரேகாவைத்தான், சிரஞ்சீவி திருமணம் செய்திருக்கிறார். இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள். அவர்களில் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம்சரணும் ஒருவர். அதே போல் அல்லு அரவிந்த் மகன் அல்லு அர்ஜூனும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். இந்த ஆண்டு வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற வெற்றி படத்தில் ராம்சரணும், 'புஷ்பா' என்ற வெற்றி படத்தில் நாயகனாக அல்லு அர்ஜூனும் நடித்திருந்தனர்.

அல்லு அர்ஜூன் 2003-ம் ஆண்டு முதலும், ராம்சரண் 2007-ம் ஆண்டு முதலும் தெலுங்கு சினிமாவில் நாயகர்களாக வலம் வருகிறார்கள். ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட இதுவரை நடித்ததில்லை. தற்போது இரண்டு நடிகர்கள் இணைந்து நடிக்கும் வழக்கம் அனைத்து மொழி சினிமாக்களிலும் பரவலாகி வருகிறது. இந்த நிலையில் அல்லு அர்ஜூன் மற்றும் ராம்சரணை இணைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் ஒன்றை இயக்க, அல்லு அரவிந்த் முயற்சி செய்து வருகிறார். 'இது தன்னுடைய பல நாள் கனவு' என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், "அல்லு அர்ஜூனையும், ராம்சரணையும் இணைத்து உருவாக்கும் படம், மிகப்பெரிய மாஸ் படமாக அமையும். இந்த ஆசை எனக்கு பல வருடங்களாக இருக்கிறது. இதற்காக பல வருடங்களுக்கு முன்பே நான் 'சரண் அர்ஜூன்' என்ற பெயரைக்கூட பதிவு செய்து விட்டேன். மேலும் அந்த பெயரை, வருடந்தோறும் முறைப்படி புதுப்பித்தும் வருகிறேன். அவர்கள் இருவரும் இணையும் படம் நிச்சயமாக உருவாகும். அது இந்திய சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

2014-ம் ஆண்டு வெளியான 'எவடு' என்ற திரைப்படத்தில், அல்லு அர்ஜூனும், ராம்சரணும் நடித்துள்ளனர். ஆனால் அந்தப் படத்தில் அவர்கள் இருவரும் ஒரு காட்சியில் கூட இணைந்து நடிக்கவில்லை. ஏனெனில் அந்தப் படத்தில் தீ விபத்து ஒன்றில் அல்லு அர்ஜூன் முகம் சிதைந்து விட, அவருக்கு ராம்சரணின் முகம் பொருத்தப்படும். அப்படி அமைந்த கதை என்பதால் இருவருக்கும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்