'தக் லைப்' படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்

இயக்குனர் மணி ரத்னம் இயக்கும் 'தக் லைப்' படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அலி பசல் இணைந்துள்ளார்.

Update: 2024-05-09 09:08 GMT

சென்னை,

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் 'தக் லைப்'. திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்துக்கு இசையமைக்கிறார்.

இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், 2ம் கட்ட படப்பிடிப்பு செர்பியாவிலும் நடைபெற்றது. செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் நடிகை திரிஷா கலந்துக்கொண்டார். மேலும் இப்படத்தில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.

இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் 'தக் லைப் படத்தில் இருந்து துல்கர் சல்மான், நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகினர். இதனால் அந்த 2 வேடங்களில் நடிக்க படக்குழு வேறு நடிகர்களை தேடியது. அதை தொடர்ந்து அவர்களுக்கு பதிலாக சிம்புவும், அருண் விஜய் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து, அண்மையில் சமூக வலைதளங்களில் 'தக் லைப்' படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று லீக் ஆனது. அதில் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, நாசர், வையாபுரி ஆகியோர் இடம்பெற்றனர். இதன் மூலம் சிம்பு நடிப்பது உறுதியாகிவிட்டதாக நெட்டிசன்கள் கூறிவந்தனர். இதனை படக்குழு நேற்று உறுதி செய்தது.

இந்த நிலையில் 'தக் லைப்' படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அலி பசல் இணைந்து நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து அலி பசல் கூறும்போது, "இயக்குனர் மணிரத்னத்தின் 'தக் லைப்' படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் பெருமையானது.

இந்திய சினிமாவின் இரண்டு முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு மிகவும் அருமையானது. இந்த பாத்திரத்தை என்னிடம் ஒப்படைத்ததற்காக இயக்குனர் மணிரத்னத்துக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 'தக் லைப்' படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்