அரசியலுக்கு வர திரிஷா முடிவா?
நடிகை த்ரிஷா அரசியலில் குதிக்கப் போவதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஒரு சில இணையதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் த்ரிஷா தரப்பில் அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தவில்லை.;
தமிழ் திரையுலகில் 2002-ல் நடிகையாக அறிமுகமான திரிஷா முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். பெரிய நடிகர்கள் ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். இந்தி படத்திலும் நடித்துள்ளார். திரிஷாவுக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி கடைசி நேரத்தில் நின்று போனது. தற்போது அவருக்கு 39 வயது ஆகிறது. ரசிகர்கள் வலைதளத்தில் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
விரைவில் திருமண அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா நடித்து முடித்துள்ளார். ரோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். மலையாள படமும் கைவசம் உள்ளது. இந்த நிலையில் திரிஷா அரசியலுக்கு வர திட்டமிட்டு இருப்பதாக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது. பா.ஜ.க. அல்லது காங்கிரஸ் கட்சியில் இணைய திரிஷா முடிவு செய்து இருப்பதாகவும், இரு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அவருடன் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்து வருவதாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. காங்கிரசில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் திரிஷா தரப்பில் அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தவில்லை.