வெளிமாநிலம் போகும் நடிகர்கள்... ஸ்டூடியோக்கள் இல்லாமல் தவிக்கும் தமிழ் சினிமா

Update: 2023-04-07 03:42 GMT

தமிழ் சினிமாவையும் ஸ்டூடியோக்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. காதல் கதைகள், காலத்தால் அழியாத அமர காவியங்கள் உள்பட தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகள் அனைத்தும் ஸ்டூயோக் களில்தான் உருவானது.

மலையோ, அருவியோ, மாட வீதிகளோ, கோபுரங்களோ எதுவாக இருந்தாலும் ஸ்டூடியோவில் அரங்குகளாக கொண்டு வந்தனர். அந்த அளவுக்கு சென்னையில் உள்ள ஸ்டூடியோக்கள் படப்பிடிப்புகளில் முக்கிய பங்கு வகித்தன.

தமிழ் படங்கள் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய படங்கள் அனைத்தும் சில காலம் முன்பு வரை சென்னை ஸ்டூடியோக்களில்தான் உருவானது.

அப்போதெல்லாம் வெளிமாநில படக்குழுவினர் சென்னைக்கு ரெயில் ஏறினால் போதும். முழுப் படப்பிடிப்பையும் முடித்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் நிறைவு செய்து படப்பெட்டியுடன் கிளம்பலாம் என்ற நிலை இருந்தது.

கோடம்பாக்கம், வடபழனி ஏரியாக்கள் படப்பிடிப்பு தளங்கள், எடிட்டிங், டப்பிங் ஸ்டூடியோக் களால் நிரம்பி இருந்தது. ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. புகழ் பெற்ற ஸ்டூடியோக்கள் பல, அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என உருமாறிவிட்டன.

தென்னிந்திய சினிமாவின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த ஏவி.எம். ஸ்டூடியோ அடுக்குமாடி குடியிருப்பாகி இருக்கிறது. அதன் எதிர் திசையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் என புகழ்பெற்ற நடிகர்களின் படங்கள் உருவான வாகினி ஸ்டூடியோ வணிக வளாகமாகவும், நட்சத்திர ஓட்டலாகவும் காட்சியளிக்கிறது.

ஜெமினி ஸ்டூடியோவும் வணிக வளாகமாகி விட்டது. பிரம்மாண்டமான வெற்றி படங்களும், இளையராஜாவின் காலத்தால் அழியாத பாடல்களும் உருவான பிரசாத் ஸ்டூடியோவை திரைப்பட கல்லூரி உள்பட வேறு பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர். இப்படி நிறைய ஸ்டூடியோக்கள் அடையாளம் இல்லாமல் போய் விட்டது.

தமிழ் சினிமாவின் பொக்கிஷங்களாக விளங்கிய ஸ்டூடியோக்கள் இப்படி கமர்ஷியல் கட்டிடங்களாக மாறியது சினிமா ஆர்வலர்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் பல பிரம்மாண்டமான படங்கள் ஐதராபாத் மற்றும் மும்பையில் உள்ள பிரபல ஸ்டூடியோக்களில் தான் எடுக்கப்படுகிறது. விதவிதமான படப்பிடிப்பு தளங்கள், போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டூடியோக்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் என அனைத்து வசதிகளும் அங்குள்ள ஸ்டூடியோக்களில் ஒரே இடத்தில் தரமாக கிடைப்பதால் தமிழ் படக்குழுவினர் அங்கு படையெடுக்கிறார்கள்.

சமீபத்தில் வந்த ரஜினியின் `அண்ணாத்த', கமல்ஹாசனின் `விக்ரம்', விஜய்யின் `வாரிசு', அஜித்குமாரின் `துணிவு' உள்ளிட்ட அனைத்து பெரிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்புகள் ஐதராபாத் ஸ்டூடியோக்களில்தான் நடந்துள்ளன. இந்த நடிகர்களெல்லாம் அங்கு மாதக்கணக்கில் முகாமிட்டு நடித்தார்கள். இப்போதும் `ஜெயிலர்', `இந்தியன் 2', `லியோ' படப்பிடிப்புகள் அங்கு நடத்தப்பட்டன.

சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால், தனுஷ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்கள் படங்களின் படப்பிடிப்புகளும் வெளிமாநிலங்களில் உள்ள ஸ்டூடியோக்களில்தான் நடக்கின்றன. ஏராளமான சிறு பட்ஜெட் தமிழ் படங்களின் படப்பிடிப்புகளும் ஐதராபாத்திலேயே நடக்கின்றன.

சென்னை புறநகரில் சில சிறிய தனியார் ஸ்டூடியோக்கள் இயங்கினாலும் அவற்றை பெரும்பாலும் `பேட்ச் ஒர்க்' எடுக்கவே பயன் படுத்துகிறார்கள்.

வெளி மாநில படப்பிடிப்பு தளங்களில் தமிழ் சினிமா படமாக்கப்படும் சூழ்நிலை அதிகமாவதால் தமிழ் சினிமா அதன் அடையாளத்தை இழப்பதோடு, இங்குள்ள தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடுகிறது. அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும் நிலைமை உள்ளது என்கின்றனர்.

உலக தரத்தில் நம்மூரில் ஸ்டூடியோக்கள் உருவாக வேண்டும் என்பதுதான் கோடம்பாக்க இயக்குனர் களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்