விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்தை புகழ்ந்த நடிகர் கவின்
‘மகாராஜா’ படத்தில் விஜய் சேதுபதி அருமையாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததாக நடிகர் கவின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.;
சென்னை,
விஜய் சேதுபதி தனது 50-வது படமான 'மகாராஜா' படத்தில் நடித்துள்ளார். இதனை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
'மகாராஜா' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் எமோஷனல் காட்சிகள் நிறைந்த வித்தியாசமான கதை களத்தில் உருவாகி இருந்தது. அதிலும் சமீப காலமாக வெளியான படங்கள் விஜய் சேதுபதிக்கு பெரிய அளவில் கை கொடுக்காமல் போன நிலையில் மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதிக்கு தரமான கம்பேக் படமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் நடிகர்கள் மகாராஜா படம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "மகாராஜா படத்தின் எமோஷனல் தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை. விஜய் சேதுபதி அருமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தைப் பார்த்த பின் என் இதயம் கனமாக இருக்கிறது. ஆனாலும் இயக்குனர் நித்திலனுக்காக மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர்களான ஜெகதீஷ், சுதன் ஆகியோருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.