நடிகர் தர்ஷனின் முன்னாள் மேலாளர் 8 ஆண்டுகளாக மாயம்; மற்றொரு மேலாளர் தற்கொலை: அதிர்ச்சி தகவல் வெளியீடு
நடிகர் தர்ஷனிடம், முன்னாள் மேலாளர் மல்லிகார்ஜுன் ரூ.2 கோடி வரை கையாடலில் ஈடுபட்டு உள்ளார் என தகவல் வெளியான சூழலில், அவர் திடீரென காணாமல் போயுள்ளார்.;
புதுடெல்லி,
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக அறியப்படுபவர் தர்ஷன் தூகுதீபா. இவருடைய தீவிர ரசிகரான ரேணுகாசாமி (வயது 33) என்பவர் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக, நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 19 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச தகவல் அனுப்பி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து ரேணுகாசாமியை படுகொலை செய்து விட்டனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தனது தோழியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச படங்களை அனுப்பியதால் நடிகர் தர்ஷனே ரேணுகாசாமியை கொடூரமாக தாக்கியதாகவும், அதில் அவர் இறந்து போனதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில், அடுத்தடுத்து அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. ரசிகர் ரேணுகாசாமி படுகொலை தொடர்பாக நடிகர் தர்ஷனை போலீசார் சமீபத்தில் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தர்ஷனின் முன்னாள் மேலாளர் மல்லிகார்ஜுன் சங்கனகவுடர் என்பவர் 8 ஆண்டுகளாக மாயமான அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இவர், கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் வசித்து வந்த நிலையில், தர்ஷனுடன் நெருங்கி பணியாற்றி வந்துள்ளார். அவருடைய திரைப்படங்களுக்கான கால்ஷீட் ஒதுக்கீடு செய்யும் பணிகளை கவனித்து வந்துள்ளார். இதுதவிர, பல்வேறு பணிகளையும் பார்த்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், 2016-ம் ஆண்டில் இருந்து அவரை காணவில்லை. இவர், மேலாளர் பொறுப்பு தவிர்த்து, பட தயாரிப்பு மற்றும் விநியோகம் போன்றவற்றிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், கடனாளியாகி உள்ளார். இவருக்கு நடிகர் அர்ஜுன் சர்ஜா ரூ.1 கோடி வரை கடன் கொடுத்திருக்கிறார். இதன்பின் அதனை திரும்ப பெறுவதற்காக சட்டரீதியாக அர்ஜுன் அணுகியுள்ளார்.
இந்த சூழலில் நடிகர் தர்ஷனிடம், மல்லிகார்ஜுன் ரூ.2 கோடி வரை கையாடலில் ஈடுபட்டு உள்ளார் என தகவல் தெரிவிக்கிறது. இந்த சூழலில் தர்ஷனின் மேலாளர் மல்லிகார்ஜுன் திடீரென காணாமல் போனது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில், தர்ஷனின் பண்ணை வீட்டின் மேலாளராக இருந்த ஸ்ரீதர் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றிய வீடியோ ஒன்றில், கடுமையான மனஉளைச்சலில் சிக்கி தவித்து வருகிறேன் என அவர் தெரிவித்து உள்ளார். இந்த வழக்கில் அவருடைய குடும்பத்தினரிடம் அதிகாரிகள் எந்த விசாரணையும் நடத்த வேண்டாம் என்று வேண்டுகோளாகவும் கேட்டு கொண்டுள்ளார்.
நடிகர் தர்ஷனின் ரசிகர் கொலை வழக்கில் தர்ஷன் உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவருடைய முன்னாள் மேலாளர் ஒருவர் 8 ஆண்டுகளாக காணாமல் போயும், பண்ணை வீட்டின் மற்றொரு மேலாளர் தற்கொலை செய்து கொண்டதும் போலீசாரிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.