ராமர் கோவில் கும்பாபிஷேகம்: இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒரு தருணம் - நடிகர் அர்ஜுன்
இந்தியர்கள் கனவு நிறைவேறியதாகவும், இதற்கு காரணமாக இருந்த பிரதமர் மோடிக்கு நன்றி என நடிகர் அர்ஜுன் கூறியுள்ளார்.
சென்னை,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் ராமஜென்ம பூமியில், ராமருக்கு பிராமாண்டமான கோவில் கட்டப்பட்டுள்ளது.
நாகரா பாணியில் கட்டப்பட்ட கோவில் வளாகம் 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டதாக இருக்கும். கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் மற்றும் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களை கொண்டுள்ளது.
கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவும், பால ராமர் சிலை பிரதிஷ்டையும் நாளை (திங்கட்கிழமை) 12.20 மணிக்கு நடைபெறுகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள நிலையில், கோவில் வளாகம் முழுவதும் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் அயோத்தி நகருக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் தற்பொழுது அயோத்தி புறப்பட்டு சென்றுள்ளனர். கோவிலுக்குள் நுழைய உரிய அனுமதி சீட்டுகளோடு இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாளை அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள நடிகர் அர்ஜுன், கடந்த 500 ஆண்டு காலமாக இந்த ராமர் கோவிலுக்காக பல்வேறு உயிர்கள் தியாகம் செய்யப்பட்டுள்ளதாக கூறி நெகிழ்ச்சி அடைந்தார். இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒரு தருணமாக இது இருக்கிறது என்றும் அவர் கூறினார். மேலும்
இதற்கு காரணமாக இருக்கின்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக கூறியுள்ளார். நாளை நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளில் நடிகர் அர்ஜுன் பங்கேற்கிறாரா? இல்லையா? என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் அயோத்தியில் நாளை ராமர் கோவில் திறப்பு முன்னிட்டு தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் அர்ஜுன் ஒரு தீவிர அனுமான் பக்தர் என்பது அனைவரும் அறிந்ததே. சென்னையில் அனுமானுக்கு அவர் ஒரு பிரம்மாண்டமாக கோவில் கட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.