திருமணத்திற்கு முன் லிவ்-இன் முறை அவசியம்; பிரபல நடிகை பதிவுக்கு சக்திமான் நடிகர் கடும் கண்டனம்
நடிகை ஜீனத் அமனின் லிவ்-இன் முறை பற்றிய சர்ச்சையான பதிவுக்கு பாலிவுட் நடிகைகள் சாய்ரா பானு மற்றும் மும்தாஜ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.;
புதுடெல்லி,
இந்தி திரையுலகில் கவர்ச்சி நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர் ஜீனத் அமன். திருமணம் பற்றி ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவர் சில தனிப்பட்ட கருத்துகளை பகிர்ந்தது சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பழம்பெரும் நடிகையான 72 வயது கொண்ட ஜீனத் அமன், லிவ்-இன் முறையில் வாழ்வதே உச்சபட்ச பரிசோதனையாக இருக்கும் என அதில் விவரித்து இருக்கிறார். திருமணம் செய்து கொள்வதற்கு முன் ஒருவரை ஒருவர் நன்கு புரிதல் அவசியம் என வலியுறுத்தும் அவர், அதற்கு ஒன்றாக வாழ்ந்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்.
அந்த பதிவில் அவர், நீங்கள் ஓர் உறவில் இருக்கிறீர்கள் என்றால், திருமணம் செய்வதற்கு முன் ஒன்றாக வாழ்ந்து பாருங்கள். இந்த அறிவுரையையே, என்னுடைய இரு மகன்களுக்கும் நான், எப்போதும் வழங்கி வருகிறேன். அவர்கள் இருவரும், ஜோடிகளுடன் லிவ்-இன் உறவுமுறையில் இருந்தனர். அல்லது... இருக்கின்றனர். எனக்கு தர்க்கரீதியாக இது சரியாக தெரிகிறது.
இரண்டு பேர் ஒரு குடும்பத்தினராக ஆவதற்கு முன், அவர்கள் இருவரும் முதலில், தங்களுடைய உறவை உச்சபட்ச பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும். ஒரு நாளில் சில மணிநேரம் நீங்கள் நன்றாக இருப்பதுபோல் காணப்படலாம்.
ஆனால், இருவரும் ஒரு குளியல் அறையை ஒன்றாக பகிர முடியுமா? உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும்போது? ஒவ்வொரு நாள் இரவும் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்று இருவருக்கிடையே ஒத்து போகும்போது? படுக்கையறையில் ஒன்றாக இருக்கும்போது? என எப்போதும் இருவரும் சரியாக இருக்க முடியுமா? என்று பரிசோதனை செய்து பார்த்து கொள்ளுங்கள்.
இரண்டு பேர் நெருங்கி இருக்கும்போது, அவர்களுக்கு இடையே எதிர்பாராத கோடிக்கணக்கான சின்ன சின்ன சண்டைகள் ஏற்படும். அதில் நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள்? என்பது மிக முக்கியம். நீங்கள் இருவரும் ஒத்து போகிறீர்களா? என்பதே இதில் முக்கிய விசயம் என தெரிவித்து இருக்கிறார். அதனால், திருமணத்திற்கு முன்பு இருவரும் லிவ்-இன் முறையில் ஒன்றாக வாழ்ந்து, பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என கூறியிருக்கிறார்.
தொடர்ந்து அவர், லிவிங்-இன் ஆக வாழ்வது நம்முடைய இந்திய சமூகத்தில் பாவம் என்ற அளவில் பார்க்கப்படுகிறது என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆனால், பல விசயங்களில் சமூகம் இறுக்கத்துடனேயே இருக்கிறது. மக்கள் என்ன கூறி விட போகிறார்கள்? என அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.
இவருடைய இந்த சர்ச்சையான பதிவுக்கு பாலிவுட் நடிகைகள் சாய்ரா பானு மற்றும் மும்தாஜ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். அமன் வாழ்ந்தது ஒரு நரக வாழ்க்கை என மும்தாஜ் கூறினார். இந்நிலையில், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இந்திய அளவில் குழந்தைகளை அதிகம் கவர்ந்த பிரபல சக்திமான் தொடரில் நாயகனாக நடித்த நடிகர் முகேஷ் கன்னா, நடிகை ஜீனத் அமனின் பதிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நம்முடைய கலாசாரம் மற்றும் வரலாற்றில் லிவ்-இன் உறவுமுறைகள் அங்கீகரிக்கப்படவில்லை. அது மேற்கத்திய கலாசாரம் ஆகும். ஜீனத் அமன் மேற்கத்திய கலாசாரத்தின்படி வாழ்ந்தவர். அதனை பற்றி அவர் பேசுகிறார்.
திருமணத்திற்கு முன் ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்றால், கணவன், மனைவியாக இருவரும் ஒன்றாக வாழ்கிறார்கள் என்றால், அவர்களுக்கு என்ன நடக்கும் என நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். இப்படி கூறுபவர்கள், கவனத்துடன் பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.
லிவ்-இன் முறை மேற்கத்திய கலாசார வாழ்க்கை முறை என கூறும் முகேஷ், அது ஏற்று கொள்ள முடியாதது என்று கடுமையாக மறுக்கவும் செய்கிறார். இந்திய கலாசார மதிப்புகளுக்கும், வரலாற்றுக்கும் முரண்பட்ட விசயம் அது என விமர்சித்திருக்கிறார்.
ஒரு பாரம்பரிய கட்டமைப்புடன் கூடிய இந்திய சமூகத்தில், இதுபோன்ற ஏற்பாடுகள் என்ன வகையான சக்தி வாய்ந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்று கவனத்துடன் சிந்தித்து, பின் பேச வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.