சினிமாவை விட்டு காஜல் அகர்வால் விலகலா?

சினிமாவை விட்டு முழுமையாக விலகி குடும்பத்தை கவனித்துக்கொள்ள காஜல் அகர்வால் முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு பட உலகில் பேச்சு கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-05-05 07:46 GMT
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த காஜல் அகர்வால் 2020-ல் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போதே சினிமாவை விட்டு விலகிவிடுவார் என்று பேசப்பட்டது. ஆனால் தொடர்ந்து நடித்து வந்தார். பின்னர் கர்ப்பமானதும் படங்களில் நடிப்பதை குறைத்தார்.

இந்தியன்-2 படத்திலும் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க முதலில் காஜல் அகர்வாலையே ஒப்பந்தம் செய்தனர். ஆனால் கர்ப்பமாக இருப்பதை காரணம் காட்டி அந்த படத்தில் இருந்து விலகினார். சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தையை வளர்ப்பதிலேயே முழு கவனம் செலுத்தி வருகிறார்.

புதிய படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை. கதை சொல்ல வரும் டைரக்டர்களையும் சந்திக்க மறுப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சினிமாவை விட்டு முழுமையாக விலகி குடும்பத்தை கவனித்துக்கொள்ள காஜல் அகர்வால் முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு பட உலகில் பேச்சு கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஜல் அகர்வாலுக்கு நெருக்கமானவர்கள் கூறும்போது, “குழந்தையை வளர்ப்பதற்காகவே சினிமாவில் இருந்து கொஞ்ச காலம் ஓய்வு எடுக்க இருக்கிறார். குழந்தை வளர்ந்ததும் மீண்டும் நடிக்க வருவார்'' என்றனர்.

மேலும் செய்திகள்