‘மைக்'கை வீசிய சர்ச்சை: மன்னிப்பு கேட்ட பார்த்திபன்
இரவின் நிழல் பட விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் முன்னிலையில் நடிகர் பார்த்திபன் வேலை செய்யாத மைக்கை தூக்கி முன்வரிசையில் கோபத்தோடு எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சமூக வலைத்தளங்களிலும் விமர்சனங்களை கிளப்பின.;
இதற்கு பார்த்திபன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறும்போது, “மைக்கை தூக்கி எறிந்தார் பார்த்திபன். இவ்வளவு அகங்காரம் தேவையா என்றெல்லாம் சமூக வலைத்தளத்தில் பேசப்படுகிறது. தூக்கிப்போட்டது மைக். ஆனால் உடைந்தது என்னவோ எனது மனது. வைரல் ஆக வேண்டும் என்பதற்காக எல்லாம் இல்லை.
கடந்த சில நாட்களாக சரியான உறக்கம் இல்லை. ஏ.ஆர்.ரகுமான் படத்துக்கு இசையமைப்பது பெரிய விஷயமாக இருந்தது. பெரிய பொருட்செலவில் விழா நடத்தினேன். ஏ.ஆர்.ரகுமானுக்கு அளித்த கேடயம் கீழே விழக்கூடாது என்ற பதற்றம். இப்படி நிறைய விஷயங்கள் எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தின. பயம், படபடப்பு எல்லாம் சேர்ந்து உள்ளே பேய் புகுந்த மாதிரி ஆனது. வைரலாக்கும் நோக்கோடு இது நடக்கவில்லை.
மேடைக்கு நாகரிகங்கள் இருக்கின்றன. ஏ.ஆர்.ரகுமானிடம் மன்னிப்பு கேட்டு குரல் பதிவு அனுப்பினேன். ரோபோ சங்கரிடமும் மன்னிப்பு கேட்டேன்’’ என்றார்.