பிரபல இந்தி நடிகையின் வலைத்தள கணக்கு முடக்கம்
நடிகை யாமி கவுதமின் இன்ஸ்டாகிராம் கணக்கை மர்மநபர்கள் முடக்கி உள்ளனர்.
நடிகர், நடிகைகள் முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கணக்குகள் தொடங்கி தங்களின் புகைப்படங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள். இதில் மர்ம நபர்கள் ஊடுருவி முடக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்நிலையில் நடிகை யாமி கவுதமின் வலைத்தள கணக்கும் தற்போது மர்ம நபர்களால் ஊடுருவி முடக்கப்பட்டுள்ளது. யாமி கவுதம் தமிழில் கவுரவம், தமிழ் செல்வியும் தனியார் அஞ்சலும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தியிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.
யாமி கவுதமை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் யாமி கவுதம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் வெளிவந்தால் அதனை கண்டுகொள்ள வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். யாமி கவுதமின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்ட தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.