மீண்டும் நடிக்க வந்த லட்சுமி
நடிகை லட்சுமி நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் லட்சுமி. தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். வயதான பிறகு குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். கடைசியாக லட்சுமி நடிப்பில் தமிழில் மூணு மூணு வார்த்தை என்ற படம் 2015-ல் வெளியானது.
இதில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து நடித்து இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு லட்சுமி தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். கன்னட படமொன்றில் நடிக்கிறார். இதுகுறித்து லட்சுமி கூறும்போது, “இயக்குனர் கதை சொன்னபோது எனக்கு பிடித்து இருந்தது. ஒரே பிரச்சினை பலரால் எப்படி கையாளப்படுகிறது என்பதுதான் கதை. எனவே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
நல்ல கதைகள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன். இளைய தலைமுறையினரிடம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டு இருக்கிறேன்’’ என்றார். லட்சுமியை தமிழ் படங்களில் நடிக்க வைக்கவும் இயக்குனர்கள் சிலர் முடிவு செய்துள்ளனர்.