ஜூனியர் என்டிஆரின் காரை தடுத்து நிறுத்தி சோதனை

பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆரின் காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்து அபராதம் விதித்துள்ளனர்.

Update: 2022-03-24 13:14 GMT
ஐதராபாத்தில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கார் வேகமாக வந்தது. அந்த காரை போலீசார் நிறுத்தினர். கார் கண்ணாடியில் உள்ளே இருப்பவர்கள் தெரியாத அளவுக்கு கருப்பு பிலிம் ஒட்டப்பட்டு இருந்தது.

ஐதராபாத்தில் இதுபோன்று கார் கண்ணாடிகளில் கருப்பு பிலிம் ஒட்ட போலீசார் தடை விதித்துள்ளனர். அதையும் மீறி காரில் கருப்பு பிலிம் ஒட்டி இருந்ததால் விசாரணை நடத்தினர். அப்போது அது தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கு சொந்தமான கார் என்று தெரியவந்தது.

ஜூனியர் என்.டி.ஆர் அந்த காரில் இல்லை. அவரது மகனும், இன்னும் சிலரும் இருந்தனர். விதியை மீறி கண்ணாடியில் கருப்பு பிலிம் ஒட்டி இருந்ததாக போலீசார் அபராதம் விதித்தனர். கருப்பு பிலிமையும் கிழித்து எறிந்து விட்டு காரை அனுப்பி வைத்தனர். ஜூனியர் என்.டி.ஆருக்கு ஏற்கனவே இதுபோல் போக்குவரத்து விதி மீறல் பிரச்சினையில் பல தடவை அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்