‘விவசாயத்துக்கு நேரம் ஒதுக்காதது குறை’ - நடிகர் சூர்யா
விவசாயத்துக்கும், கிராமத்துக்காகவும் நேரம் ஒதுக்காதது குற்ற உணர்வாக இருக்கிறது என்று நடிகர் சூர்யா தெரிவித்தார்.
நடிகர் கார்த்தி உழவன் பவுண்டேசன் என்ற அமைப்பை தொடங்கி உழவுத்தொழிலை மேம்படுத்துவதற்கான நீர் ஆதாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சிறந்த விவசாய அமைப்புகளுக்கான உழவன் விருதுகளை சென்னையில் நடந்த விழாவில் வழங்கினார்.
இந்த விழாவில் நடிகர் சூர்யா பங்கேற்று பேசும்போது, ‘’கார்த்திக்கு இயற்கை மிகவும் பிடிக்கும். அதனால் உழவன் அமைப்பை ஆரம்பித்து இருக்கிறார். இதன் மூலம் பல இடங்களில், கால்வாய்களுக்கு தண்ணீர் சென்றது. நான் அகரம் அமைப்பை ஆரம்பித்த பிறகு, அது பல மாணவர்களின் கனவுகளை நனவாக்கியது. அது போல் உழவன் அமைப்பும் பெரும் வெற்றியை அடையும். நான் விவசாயத்திற்காகவும், கிராமத்திற்காகவும் நேரம் ஒதுக்காதது குறையாக இருக்கிறது.
அதை அவர்கள் வேலை என நினைப்பது தவறு. பலவற்றை கற்கும் நாம், உற்பத்தி பற்றி படிப்பதில்லை. காய்கறிகள் கிடைக்கும் இடம் பற்றி கேட்டால் சூப்பர் மார்கெட் என இப்போது உள்ள தலைமுறை நினைக்கிறார்கள். நமது குழந்தைகளுக்கு விவசாயம் பற்றி அறிமுகம் செய்துவைக்க வேண்டும். நாம் பொருள் வாங்கும் போது, அதில் விவசாயிகளுக்கு எவ்வளவு பணம் போகிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும்’’ என்றார். விழாவில் நடிகர்கள் சிவகுமார் கார்த்தி, இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோரும் பேசினார்கள்.