தெலுங்கில் அறிமுகமாகும் நஸ்ரியா

தெலுங்கு சினிமா உலகில் இளம் கதாநாயகனாகவும், முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் இருப்பவர், நானி. இவர் தெலுங்கு மட்டுமல்லாது, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என்று பல மொழிகளிலும், ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’ படத்தின் மூலமாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2022-02-21 00:51 GMT
கடந்த 2020-ம் ஆண்டு வெளியான ‘வி’ என்ற திரில்லர் திரைப்படம், நானியின் 25-வது படமாக அமைந்தது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படத்திற்குப் பிறகு, கடந்த ஆண்டு வெளியான ‘டக் ஜெகதீஷ்’, ‘ஷ்யாம் சிங்ஹா ராய்’ ஆகிய இரண்டு படங்களும் கூட வெற்றிப்படங்களாகவே அமைந்தன.

இந்த நிலையில் இரண்டு படங்களை தயாரித்து வரும் நானி, ‘அன்டே சுந்தரானிகி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் இந்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘மென்டல் மதிலோ’, ‘புரோ சேவரேவருரா’ ஆகிய அதிரி புதிரி வெற்றிப் படங்களை இயக்கிய, இளம் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கும் மூன்றவாது படம் இதுவாகும்.

இந்தப் படத்தில் இன்னொரு சிறப்பம்சமாக, நானி ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார். இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும், 2013-ம் ஆண்டுதான் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடித்த அவர், நல்ல நடிகையாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். இவர் மொத்தமாக 8 படங்களில் நடித்த நிலையில் 2014-ம் ஆண்டு மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு, சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

பின்னர் 2018-ம் ஆண்டு ‘கூடே’, 2020-ல் ‘டிரன்ஸ்’, ‘மணியராயிலே அசோகன்’ ஆகிய மலையாளப் படங்களில் நடித்தார். இவர் முதன் முறையாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் படமாக, நானியின் நடிப்பில் உருவாகி வரும் ‘அன்டே சுந்தரானிகி’ படம் இருக்கிறது. மலையாளத்தில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வந்த நஸ்ரியா, தெலுங்கு சினிமா உலகில் அறிமுகமாவதன் மூலம், மீண்டும் சினிமாவில் தொடர்ச்சியாக நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்