திருவிதாங்கூர் மன்னரை வெப் தொடரில் தவறாக சித்தரித்ததாக எதிர்ப்பு

ராக்கெட் பாய்ஸ் தொடரில் திருவிதாங்கூரின் கடைசி மன்னர் சித்திரை திருநாள் பலராம வர்மாவை அவதூறாக சித்தரித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

Update: 2022-02-12 09:24 GMT
ராக்கெட் பாய்ஸ் என்ற வெப் தொடர் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது. அபய் பன்னு இயக்கி உள்ளார். இந்தியா சுதந்திரம் பெற்றதும் நடந்த அறிவியல் ஆராய்ச்சி முன்னேற்றங்களை சொல்லும் கதையம்சத்தில் தயாராகி உள்ளது. இதில் இந்திய அணுசக்தி விஞ்ஞானி ஹோமி ஜோ பாபா கதாபாத்திரத்தில் ஜிம் சர்ப்பும், டாக்டர் விக்ரம் சாராபாய் கதாபாத்திரத்தில் இஷ்வக் சிங்கும், பிரபல நடன கலைஞர் மிருணாளியாக ரெஜினா கஸாண்ட்ராவும், அப்துல் கலாம் வேடத்தில் அர்ஜுன் ராதாகிருஷ்ணனும் நடித்துள்ளனர். 

இந்த தொடரில் திருவிதாங்கூரின் கடைசி மன்னர் சித்திரை திருநாள் பலராம வர்மாவை அவதூறாக சித்தரித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. திருவிதாங்கூரில் உள்ள மோனோசைட் தாதுக்களை ஏற்றுமதி செய்ததில் ஊழல் நடந்துள்ளதாக சித்தரித்து அதில் மன்னரை தொடர்புபடுத்தி காட்சிகள் வைத்து இருப்பதாக மன்னரின் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். 

இதுகுறித்து மன்னர் சித்திரை திருநாளின் மருமகள் அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமிபாய் கூறும்போது, “வெப் தொடரில் திருவிதாங்கூரின் கடைசி மன்னர் சித்திரை திருநாளை உண்மைக்கு மாறாக ஆதாரமில்லாமல் தவறாக சித்தரித்து உள்ளனர். எனவே இந்த தொடருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

மேலும் செய்திகள்