புதிய சாதனை படைத்த 'வீர தீர சூரன்' படத்தின் டீசர்
சியான் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன்' படத்தின் டீசர் அதிக பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
சென்னை,
'சேதுபதி, சித்தா' படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு. துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது. முதலில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் மற்றும் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலாகின.தமிழ்நாட்டில் இப்படத்தின் திரையரங்க விநியோக உரிமையை 5 ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் 'வீர தீர சூரன்' படத்தின் டீசர் நேற்று முன்தினம் வெளியானது. அதாவது இப்படத்தின் டீசர் வெளியான 48 மணி நேரத்தில் யூடியூப்பில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்து உலகளவில் சாதனை படைத்துள்ளது. மேலும் யூடியூப்பில் தற்போது வரை டிரெண்டிங்கில் முதல் இடத்திலும் இருந்து வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக உள்ளதால், ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.