'வடிவேலு குறித்து அவதூறு கூற மாட்டேன்' - நடிகர் சிங்கமுத்து
நடிகர் சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வடிவேலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
சென்னை
நடிகர் சிங்கமுத்து யூ-டியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாகக்கூறி ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வடிவேலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில். "பல்வேறு யூ-டியூப்சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், என்னைப் பற்றி துளி கூட உண்மையில்லாத பல பொய்களைக் கூறி, தரக்குறைவாக பேசி உள்ளார். எனவே சிங்கமுத்து ரூ. 5 கோடியை எனக்கு நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும். அத்துடன் என்னைப் பற்றி அவதூறு பரப்ப சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. அதன்படி, கடந்த 6-ம் தேதி நடந்த விசாரணையில், இரு தரப்பில் இருந்தும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை 11-ம் தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தார். மேலும், அதுவரை சிங்கமுத்து, வடிவேலு குறித்து எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்க கூடாது என்றும், ஏற்கனவே சிங்கமுத்து கூறியது யூ-டியூபில் இருப்பதால் அதனை நீக்குமாறு அந்த சேனலுக்கு கடிதம் எழுதுமாறும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வடிவேலு குறித்து எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்று தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த உரிமையியல் வழக்கின் விசாரணை முடியும் வரை வடிவேலு குறித்து வாய் மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ தவறான எந்த தகவலையும் தெரிக்க போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.